சையது முஷ்டாக் அலி டி20 சூப்பர் லீக் சுற்றில் இன்று தமிழகம் - கர்நாடகா மோதல்

தினகரன்  தினகரன்
சையது முஷ்டாக் அலி டி20 சூப்பர் லீக் சுற்றில் இன்று தமிழகம்  கர்நாடகா மோதல்

சூரத்: சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் லீக் சுற்றில் தமிழகம் - கர்நாடகா மோதும் பி பிரிவு போட்டி சூரத்தில் இன்று மாலை 6.30க்கு தொடங்குகிறது. சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று கடந்த 9ம் தேதி  நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில்  தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ரயில்வே, மும்பை உட்பட 38 அணிகள் 5 பிரிவுகளாக களமிறங்கின. லீக் சுற்று 17ம் தேதி முடிவடைந்தது.    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த  தமிழ்நாடு உட்பட 10 அணிகள் அரையிறுதிக்கு முந்தைய சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த சுற்றின் ஏ பிரிவில்  டெல்லி, பரோடா,  ராஜஸ்தான், மகராஷ்டிரா, அரியானா  அணிகளும், பி பிரிவில்  தமிழ்நாடு, கர்நாடகா,  ஜார்கண்ட், பஞ்சாப், மும்பை அணிகளும் இடம் பெற்றுள்ளன. சூப்பர் லீக் போட்டிகள் வரும் 27ம் தேதியுடன் முடிகிறது. பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் களம் காணும். அரையிறுதி ஆட்டங்கள் 29ம் தேதியும், பைனல் டிச.1ம் தேதியும் நடைபெறும்.பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு  இன்று கர்நாடகா அணியுடன் மோதுகிறது. சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகாவிடம் தோற்றதற்கு இன்று பதிலடி கொடுக்கும் முனைப்புடன்  தமிழகம்  விளையாடும். கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டுமின்றி அணியில் உள்ள முரளி விஜய், பாபா அபராஜித், விஜய் ஷங்கர்,  ஷாருக் கான், ஜெகதீசன் பந்து வீச்சில் முருகன் அஸ்வின், சாய் கிஷோர், நடராஜன், பெரியசாமி, வாஷிங்டன் சுந்தர், முகமது  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் கர்நாடக அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியில்கே.எல்.ராகுல்,  தேவ்தூத் படிக்கல், கருண் நாயர், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் கோபால், பிரவீன் துபே,  கவுசிக் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முஷ்டாக் அலி டி20 தொடரை பொறுத்தவரை இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் கர்நாடகா 3 முறையும், தமிழ்நாடு ஒரு முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சரி சமனில் முடிந்துள்ளது.

மூலக்கதை