மகாராஷ்டிரா மாநிலத்தில் காங். கூட்டணி ஆட்சியா? சோனியா காந்தி நழுவல்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங். கூட்டணி ஆட்சியா? சோனியா காந்தி நழுவல்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையுமா என்பது தொடர்பான கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.  மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கு பாஜ 105 இடங்களையும், சிவசேனா 56 தொகுதிகளையும் கைப்பற்றின. 288 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதேபோல் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 44 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.  பாஜ, சிவசேனா கூட்டணியில் ஏற்பட்ட முதல்வர் பதவி தொடர்பான பிரச்னையால் அங்கு கடந்த 12ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், `‘மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்றும் இது தொடர்பான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் நிறைவடையும்’’ என்றும் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து சோனியா காந்தியிடம் ெசய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு `‘கருத்து கூற விரும்பவில்லை’’ என சோனியா தெரிவித்தார்.

மூலக்கதை