சித்தராமையா தூண்டுதலின்பேரில் பதவியை ராஜினாமா செய்தோம்: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
சித்தராமையா தூண்டுதலின்பேரில் பதவியை ராஜினாமா செய்தோம்: எம்எல்ஏ குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி பதவியை ராஜினாமா செய்த 17 பேரில் ஒருவர் ஆவார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான இவர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்–்கு  அளித்த பேட்டி:கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்  சித்தராமையாவைக் காட்டிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் பலம்  ஓங்கியிருந்தது. டி.கே.சிவக்குமார் எப்படியாவது கூட்டணி ஆட்சியை 5  ஆண்டுகள் தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதற்காக காங்கிரஸ்  எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பாளராக இருந்து வந்தார்.  எனவே   அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்ெகாண்டார். இதனால் டி.கே.சிவக்குமார் மீது காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் மரியாதை அதிகரித்தது.  சித்தராமையாவின்  செல்வாக்கு குறையத் தொடங்கியது. மேலும், கட்சியை வழி நடத்தும் பொறுப்பு டி.கே.சிவக்குமாரிடம் ஒப்படைக்க பலரும் முடிவு செய்தனர். இதை எப்படியோ  தெரிந்துகொண்ட சித்தராமையா கூட்டணி ஆட்சியை வீழ்த்துவதென முடிவு செய்தார்.  இதற்கான என்னை போன்ற சில எம்.எல்.ஏ.க்களை சித்தராமையா தூண்டிவிட்டார்.  சித்தராமையாவின் தூண்டுதலின் பேரில் ஒரு முறை இரு முறை அல்ல எட்டு முறை  கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்தோம். சித்தராமையாவின் தூண்டுதலின் பேரில் தான்  நாங்கள் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தோம் என்றார்.

மூலக்கதை