எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் : முடிவுக்கு வருமா மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம்

தினமலர்  தினமலர்
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் : முடிவுக்கு வருமா மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம்

புதுடில்லி, : 'மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பான பேச்சு முழு வீச்சில் நடந்து வருகிறது. டிச.,க்குள் புதிய அரசு பொறுப்பேற்கும்' என, சிவசேனா மூத்த தலைவர், சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை நடக்கும் கூட்டத்தில், தவறாமல் பங்கேற்கும் படி, எம்.எல்.ஏ.,க்களுக்கு, சிவசேனா அவசர அழைப்பு விடுத்துள்ளது.சசமஹாராஷ்டிராவில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டு, பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வென்றன.

ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவியை தங்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை, சிவசேனா முன்வைத்தது. அதனால், கூட்டணி முறிந்தது. புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு ஏற்படாததால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இந்நிலையில், காங்., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்.,குடன் இணைந்து, கூட்டணி அரசு அமைப்பது குறித்து, சிவசேனா பேசி வருகிறது. ஆனால், முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

காங்., தலைவர் சோனியாவுடன், சரத் பவார் பலமுறை சந்தித்து பேசினார். அதேபோல், சிவசேனாவும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, சஞ்சய் ராவத் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பான பேச்சு முழு வீச்சில் நடந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்குள் இந்தப் பேச்சுகள் முடிந்து, டிச.,க்குள் புதிய அரசு அமையும். ஏதாவது ஒரு கட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அது, மிக விரைவில் நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை நடக்க உள்ளது. இதில் அனைவரும் தொடர்ச்சி 3ம் பக்கம்எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்...முதல் பக்கத் தொடர்ச்சிபங்கேற்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மூத்த தலைவர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது."அனைத்து எம்.எல்.ஏ.,க் களையும் அடையாள அட்டையுடன், ஐந்து நாட்களுக்கு தேவையான உடைகளுடன் வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் பேச்சு நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்," என, கட்சியின் மூத்த தலைவர் அப்துல் சட்டார் தெரிவித்துள்ளார்.

மேயர் தேர்தலில்யார் எந்தக் கூட்டணி?



சட்டசபை தேர்தல் முடிந்து, ஆட்சி அமைவதில் குழப்பம் நீடிக்கும் நிலையில், மஹாராஷ்டிரா வில், மேயர் பதவிக்கான தேர்தல், நாளை நடக்க உள்ளது. இதில், யார் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாக்பூர், புனே, லாட்டூர் உள்ளிட்ட சில மாநகராட்சிகளில், அதிக கவுன்சிலர்கள் உள்ளதால், மேயர் தேர்தலில் பா.ஜ.,வுக்கு வெற்றி உறுதி. அதே நேரத்தில், சில மாநகராட்சிகளில், பா.ஜ., மற்றும் சிவசேனா சமபலத்தில் உள்ளன. அதனால், இந்த இடங்களில் வெற்றிபெற காங்., மற்றும் தேசியவாத காங்., ஆதரவு சிவசேனாவுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல், சில இடங்களில், காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணிக்கு அதிக இடங்கள் உள்ளன. அங்கு பா.ஜ., வெற்றி பெறுவதை தடுக்க, சிவசேனா உதவுமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.நாசிக் மாநகராட்சியில், மொத்தமுள்ள, 122 இடங்களில், பா.ஜ.,வுக்கு 65 கவுன்சிலர்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு, 34, காங்., மற்றும் தேசியவாத காங்.,குக்கு தலா, 6 பேர் உள்ளனர்.
வெற்றியை உறுதி செய்வதற்காக, பா.ஜ., தன் கவுன்சிலர்களை, 'ரிசார்ட்' எனப்படும் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது.

மோடியுடன் பவார் சந்திப்பு

மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் நேற்று சந்தித்துப் பேசினார்.பார்லி., வளாகத்தில் நடந்த, 50 நிமிட சந்திப்பு குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பவார் கூறியுள்ள தாவது:

மஹாராஷ்டிராவில் விவசாயிகள் கடும் பிரச்னையில் உள்ளனர். சமீபத்தில் பெய்த திடீர் மழையால், பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அதனால், எந்த நிபந்தனையும் இல்லாமல், விவசாயிகளின் பயிர்க் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என, பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

தற்போது ஜனாதிபதி ஆட்சி நடப்பதால், மாநில விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு, கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்.இவ்வாறு, அவர் கூறினார்.சமீபத்தில், பவாரின் கட்சி குறித்து, பார்லி.,யில் மோடி பாராட்டிப் பேசினார். அதைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனியா ஒப்புதல்?

மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் நீடிக்கும் குழப்பம் குறித்து, காங்., தலைவர் சோனியாவிடம் கேட்ட போது, கருத்து தெரிவிக்க மறுத்தார். ஆனால், சிவசேனா கூட்டணிக்கு அவர் பச்சை கொடி காட்டிவிட்டதாக, நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, காங்., ராஜ்யசபா எம்.பி., மஜீத் மேமன் கூறுகையில், 'கொள்கையளவில் எங்கள் மத்தியில் மோதல் இல்லை. குறைந்தபட்ச செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சில, சிறிய பிரச்னைகளில் உள்ள கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்படும். சோனியாவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகவே தெரிகிறது. மஹாராஷ்டிராவில் விரைவில் வலுவான ஆட்சி அமையும்' என்றார்.

மூலக்கதை