4ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது பாட்டி

தினமலர்  தினமலர்
4ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது பாட்டி

திருவனந்தபுரம்,: கேரளாவில், மாநில எழுத்தறிவு இயக்கம் சார்பில் நடத்தப்படும், முதியோருக்கான எழுத்தறிவு தேர்வில், 105 வயதான பாட்டி, தேர்வு எழுதியது அனைவரையும் வியப்படைய வைத்தது. இந்த தேர்வு, நான்காம் வகுப்புக்கு சமமானது.

முற்றுப்புள்ளி:


கேரளாவில், எழுத்தறிவு இயக்கம் சார்பில், முதியோருக்கு எழுத, படிக்க கற்றுத்தரப்படுகிறது. கொல்லத்தை சேர்ந்தவர் பாகீரதி, 105. இவருக்கு, பெரிய படிப்பு படிக்க வேண்டும் என, சிறு வயதிலிருந்தே ஆசையிருந்தது. ஆனால், தன் ஒன்பதாவது வயதில் தாயை இழந்ததால், தம்பி, தங்கைகளை காப்பாற்ற வேண்டி, 3ம் வகுப்போடு, படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திருமணத்துக்குப் பின் படிக்கலாம் என நினைத்திருந்த பாகீரதி, 30 வயதில் கணவரை இழந்தார். நான்கு மகள்கள், இரண்டு மகன்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு, பாகீரதியின் தோளில் விழுந்தது. படிக்க வேண்டும் என்ற ஆசை அப்போதும் நிராசையானது.

ஒரு வழியாக, மகள்கள், மகன்களை வளர்த்து, திருமணம் செய்து கொடுத்தார். 15 பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேர குழந்தைகள் பிறந்தனர். ஆனாலும், பாகீரதி பாட்டிக்குக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவில்லை.ஆர்வம்அவர், கொல்லத்தில், மாவட்ட எழுத்தறிவு இயக்கம் நடத்தும் முதியோர் பள்ளியில், தன் இளைய மகள் உதவியுடன் சேர்ந்தார். அங்கு சொல்லிக் கொடுத்ததை ஆர்வத்துடன் படித்தார். சமீபத்தில், எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்விலும் பங்கேற்றார். எழுதுவதற்கு பாகீரதியின் மகள் உதவி செய்தார். 'இந்த தேர்வு, நான்காம் வகுப்புக்கு சமமானது' என, தேர்வாளர்கள் தெரிவித்தனர். பாகீரதிக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் கூறுகையில், 'பாகீரதி பாட்டிக்கு, எழுதுவது தான் மிகவும் கஷ்டமாக இருந்தது.


ஞாபக சக்தி அதிகம்:


'சுற்றுச்சூழல், கணக்கு, மலையாளம் ஆகிய பாடங்களில் நடத்தப்பட்ட தேர்வை எழுத, அவருக்கு, மூன்று நாள் ஆனது. 105 வயதிலும், பாட்டிக்கு ஞாபக சக்தி அதிகம் உள்ளது. பார்வையிலும் பிரச்னையில்லை' என்றனர். பாகீரதி பாட்டிக்கு, ஆதார் கார்டு இல்லாததால், அவருக்கு இதுவரை, விதவை ஒய்வூதியமோ, முதியோர் ஓய்வூதியமோ கிடைக்கவில்லை.கேரளாவில், கடந்த ஆண்டு, எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்வில், 96 வயதான, கார்த்தியாயினி பாட்டி தேர்வு எழுதி, 100க்கு, 98 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை