பிரசாந்தி நிலையத்தில், பெண்கள் தின விழா

தினமலர்  தினமலர்
பிரசாந்தி நிலையத்தில், பெண்கள் தின விழா

சென்னை : உலகம் முழுவதும் உள்ள சாய் பக்தர்களுக்காக, பிரசாந்தி நிலையத்தில், பெண்கள் தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில், பிரசாந்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு தோறும் நவ., 19ம் தேதி, பெண்கள் தின விழா கொண்டாடப்படுகிறது. கடந்த, 1995 முதல், இந்த தினத்தில், சமூகத்தில், ஆன்மிகத்தில் புரட்சி ஏற்படுத்திய, சிறந்த பெண்களை அழைத்து, சுவாமி பங்கேற்க செய்வார்.

நேற்றைய பெண்கள் தினம், சத்ய சாய் பாபாவின் சுப்ரபாதத்துடன் சிறப்பாக துவங்கியது. தொடர்ந்து, சோபான சுவாமிநாதனின் வீணை இசை நிகழ்ச்சி உட்பட, பல்வேறு பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.

விழாவில், தெலுங்கானா கவர்னர், தமிழிசை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: சுவாமி சத்ய சாய்பாபா உடனான, என் ஆன்மிக அனுபவம் நெகிழ்ச்சியானது. எனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை, சுவாமி தன் கைகளால் தொட்டு குணப்படுத்தினார். அது, என்னை அதிசயிக்க வைத்த, அற்புதமான நிகழ்வு. ஒரு சாதாரண பக்தையாக, பிரசாந்தி நிலையத்திற்கு, என்னால் வர முடியவில்லை. ஆனால், தெலுங்கானா கவர்னராக தற்போது வந்துள்ளேன். இந்த புகழும், சுவாமியையே சேரும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழா குழுவைச் சேர்ந்த ராஜேஸ்வரி, நீலம் தேசாய் உட்பட பலர், விழாவில் பங்கேற்றனர்.

மூலக்கதை