குறைவான அதிகாரிகள்; சிறப்பான நிர்வாகம் ரயில்வே வாரிய இயக்குனர்கள் 50 பேர் மண்டலத்துக்கு மாற்றம்: மோடி திட்டப்படி அதிரடி

தினகரன்  தினகரன்
குறைவான அதிகாரிகள்; சிறப்பான நிர்வாகம் ரயில்வே வாரிய இயக்குனர்கள் 50 பேர் மண்டலத்துக்கு மாற்றம்: மோடி திட்டப்படி அதிரடி

புதுடெல்லி: ரயில்வே வாரியத்தில் பணியாற்றும் இயக்குனர்கள் மட்டத்திலான 50 அதிகாரிகளை மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.   ரயில்வே வாரியத்தை மறுசீரமைக்க, ‘பிபேக் டெப்ராய் குழு’ கடந்த 2015ல் பரிந்துரை ெசய்திருந்தது. இந்த குழு தனது அறிக்கையில், ரயில்வேயின் மத்திய கட்டமைப்பு, ரயில்வே பணியை பாதிப்பதுடன் தனது இலக்கை அடைய தடையாக இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும், ரயில்வே வாரியத்தில் அதிகமாக உள்ள ஊழியர்கள் அந்த அமைப்பு தீவிரமாக செயல்பட தடையாக இருப்பதாகவும் தெரிவித்தது.  இதையடுத்து, ரயில்வே வாரியத்தில் இயக்குனர்கள் மட்டத்திலான 200 பேரை 150 ஆக குறைக்க மோடி அரசு முடிவு செய்தது. இதற்காக, 50 இயக்குனர்களை மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதில் ஐஆர்எஸ்இ மற்றும் ஐஆர்டிஎஸ் இருந்து தலா 10 பேரும், ஐஆர்ஏஎஸ் பிரிவில் இருந்து 7 பேரும், ஐஆர்எஸ்எம்இ.ல் இருந்து 6 பேரும், ஐஆர்எஸ்இஇ மற்றும் ஐஆர்எஸ்எஸ்இ பிரிவுகளில் இருந்து தலா 5 பேரும், ஐஆர்எஸ்எஸ், ஐஆர்பிஎஸ் பிரிவுகளில் இருந்து தலா 3 அதிகாரிகளும், ஆர்பிஎப் பிரிவில் இருந்து ஒருவரும் என மொத்தம் 50 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், `‘குறைந்த அதிகாரிகளை கொண்டு சிறப்பான நிர்வாகம் தரும் பிரதமரின் திட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மண்டலங்களில் சரியான முறையில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்,’’ என்றார்.

மூலக்கதை