விமான டிக்கெட்டால் கோடீஸ்வரர் ஆன இந்தியர்

தினமலர்  தினமலர்
விமான டிக்கெட்டால் கோடீஸ்வரர் ஆன இந்தியர்

துபாய் : அபுதாபியில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வரும் இந்தியர் ஒருவர், விமான டிக்கெட் வாங்கியதன் மூலம் கோடீஸ்வரர் ஆகி உள்ளார்.

இந்தியாவின் பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட லூயிஸ் ஸ்டீபன் மார்டிஸ் (48) என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இவர் அபுதாபியில் ஐடி சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக ஆன்லைனில் விமான டிக்கெட் வாங்குவதை, அதிலும் 666 என்ற எண்ணுடைய டிக்கெட்டை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Dubai Duty Free என்ற நிறுவனம், ஆண்டுதோறும் Dubai Duty Free Millennium Millionaire and Finest Surprise என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. இதில், விமான டிக்கெட் எண்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்குவது வழக்கம். துபாய் விமான சாகச நிகழ்ச்சியின் 3வது நாளில், இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் மார்டிஸ் தனது ராசி எண்ணாக தேர்வு செய்த 0666 என்ற எண் தேர்வு செய்யப்பட்டது. இதனால் மார்டிஸ் குடும்பத்தினர் உற்சாகமடைந்துள்ளனர். இந்த போட்டியில் பெற்ற பரிசுத் தொகையை என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு, 10 சதவீதத்தை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாகவும், மீதமுள்ள தொகையை தனது 2 குழந்தைகளின் படிப்பிற்காக செலவிட உள்ளதாகவும் மார்டிஸ் தெரிவித்துள்ளார். மார்டிஸ் தவிர மேலும் 2 பேரும் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

மூலக்கதை