இலங்கை அரசியலில் பரபரப்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவி விலகல்?: மீண்டும் பிரதமர் தேர்தலுக்கு வாய்ப்பு

தினகரன்  தினகரன்
இலங்கை அரசியலில் பரபரப்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவி விலகல்?: மீண்டும் பிரதமர் தேர்தலுக்கு வாய்ப்பு

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி வருகிறது. இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இலங்கையில் கடந்த முறை மைத்ரிபால சிறிசேனா அதிபராக இருந்தபோது, தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை பதவியில் இருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக புதிய பிரதமராக முன்னாள் அதிபர்  ராஜபக்சேவை நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், மகிந்த ராஜபக்சேவின் நியமனம் செல்லாது என்று கடந்தாண்டு டிசம்பரில் அறிவித்தது.இலங்கை அதிபர் தேர்தல்:இதனையடுத்து, இலங்கையில் அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 16-ம் தேதி நடந்தது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில்  பல்வேறு  கட்சிகள்,  அமைப்புகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும், பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் (70), ஆளும்  ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவியது.அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் கடந்த 17-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர் மொத்தம் 69 லட்சத்து  24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசாவை  விட இவர் 13  லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். கோத்தபய 52.25 சதவீத வாக்குகளையும், சஜித் 41.99 சதவீத  வாக்குகளையும் பெற்றனர்.இதையடுத்து, அனுராதாபுரம் நகரில் புத்த கோவிலுக்கு அருகே நடைபெறும் நிகழச்சியில் முறைப்படி இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். தேர்தல் தோல்வி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில்  விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரணில் விக்கிரமசிங்கே கட்சியை சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.ராஜபக்சே பேட்டி: இதற்கிடையே, ராஜபக்சே தனது 74வது பிறந்தநாளையொட்டி அளித்த பேட்டியில், ‘‘புதிய அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட அதிபரும், அமைச்சர்களும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே, தேர்தல் மூலம் பொதுமக்கள்  அளித்த முடிவுக்கு மதிப்பளித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக பதவி விலக வேண்டும்,’’ என்றார். மீண்டும் பிரதமர் தேர்தலா? இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவி விலகவுள்தாக செய்திகள் வெளியாகி வருகிறது. இலங்கை ஊடங்கங்கள் இது தொடர்பாக நிறைய செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் இது தொடர்பாக  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே வருகிறது, அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அதன்படி, இன்று ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினால், அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்படும். அதன்பின் மீண்டும் பிரதமர் பதவிக்கு  தேர்தல் நடக்கும். அதுவரை இடைக்கால அரசு பதவி ஏற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை