பந்துகள்... ஒவ்வொன்றும் புது விதம் * முகமது ஷமி ‘ஐடியா’ | நவம்பர் 19, 2019

தினமலர்  தினமலர்
பந்துகள்... ஒவ்வொன்றும் புது விதம் * முகமது ஷமி ‘ஐடியா’ | நவம்பர் 19, 2019

 புதுடில்லி: ‘‘ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு அளவில் வீசுவதால் பேட்ஸ்மேன்களை எப்போதும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கலாம்,’’ என முகமது ஷமி தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்துாரில் நடந்த முதல் டெஸ்டில் மொத்தம் 7 விக்கெட் சாய்த்து இந்தியா வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெரிதும் கைகொடுத்தார்.

அடுத்து கோல்கட்டாவில் நடக்கவுள்ள பகலிரவு டெஸ்டில் சாதிக்க இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய அணியின் முகமது ஷமி கூறியது:

ஆடுகளத்தை தன்மை எப்படி உள்ளது என்பதை பவுலர்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் மந்தமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.

ஒருவேளை பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாறுகின்றனர் என தெரிந்து கொண்டால் உற்சாகம் அடைந்து விடுவேன். பந்தின் அளவை தொடர்ந்து மாற்றி மாற்றி வீசுவேன். இதனால் எந்த பந்தை, எப்படி விளையாடுவது என பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு முறையும் யோசித்துக் கொண்டே இருப்பர். பகலிரவு டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு இந்த திட்டம் முக்கிய உதவியாக அமையலாம்.

இவ்வாறு முகமது ஷமி கூறினார்.

மூலக்கதை