‘பிங்க்’ பந்து... கை கூடுமா, கை நழுவுமா * ஹர்பஜன் சிங் புது விளக்கம் | நவம்பர் 19, 2019

தினமலர்  தினமலர்
‘பிங்க்’ பந்து... கை கூடுமா, கை நழுவுமா * ஹர்பஜன் சிங் புது விளக்கம் | நவம்பர் 19, 2019

புதுடில்லி: ‘‘பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் ‘பிங்க்’ நிற பந்து, மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்,’’என, ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி வரும் 22ல் கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்குகிறது. இதில், பயன்படுத்தப்படும் ‘பிங்க்’(இளஞ்சிவப்பு) நிற பந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்.

இது குறித்து இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியது:

ஒருநாள் போட்டிக்கான வெள்ளை நிற பந்தை மெருகேற்ற பூசப்படும் அரக்கு, பனியின் ஈரப்பதத்தில் பட்டு விரைவில் மங்கிவிடும். இதனால், சோப்பு கட்டி மாதிரி வழுக்கும். இது போல ‘பிங்க்’ நிற பந்து இருக்காது. ஏனெனில்  ‘பிங்க்’ நிற பந்தின் மீது பளபளப்புக்கு கூடுதலாக அரக்கு பூசுவதால், மேல்பகுதியில் ஈரம் நிற்காது. தையல்கள்(சீம்) மட்டும் ஈரமாக இருக்கும். இது விரல்களை பயன்படுத்தி பந்துவீசும் ‘சுழல்’ வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பொதுவாக தையல்கள் மீது விரல் வைத்து வீசும் போது தான் பந்து சுழலும். தையல் பகுதி ஈரமாக இருந்தால், அவர்களுக்கு போதிய ‘கிரிப்’ கிடைக்காமல், கை நழுவக் கூடும்.

இந்த பிரச்னை மணிக்கட்டு பயன்படுத்தி பந்துவீசும் குல்தீப் யாதவ் போன்ற ‘சுழல்’ வீரர்களுக்கு கிடையாது. இவர்களுக்கு ‘தையல்’ தொல்லை இல்லை. 2016ல் இந்தியாவில் நடந்த துலீப் டிராபி போட்டியில் ‘பிங்க்’ நிற பந்து பயன்படுத்தப்பட்டது. இதில், குல்தீப் நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை.

‘சுழல்’ வீரர்களை சமாளிப்பதற்கு முன், இந்திய ‘வேகங்களிடம்’ வங்கதேச வீரர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். ஏனெனில் சூரியன் மறையும் நேரத்தில் கோல்கட்டாவில் ‘வேகங்கள்’ அதிக தாக்கத்தை ஏற்படுத்துவர்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற அம்பயர் சைமன் டாபெல் கூறுகையில்,‘‘பிரகாசமான சூரிய ஒளியில் இருந்து செயற்கையான மின்னொளிக்கு போட்டி மாறுகின்ற அந்தி மாலை பொழுது சிக்கலானது. இந்த நேரத்தில் பந்தை கணிப்பது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். இதே போன்ற சவால் கள அம்பயர்களுக்கும் இருக்கும். இவர்கள் வலை பயிற்சியில் அதிகளவில் பங்கேற்று ‘பிங்க்’ நிற பந்தின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். பந்தை சரியாக பார்ப்பதற்கு சிறப்பு ‘லென்ஸ்’ அணிவது குறித்து அம்பயர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,’’என்றார்.


டிராவிட் வரவேற்பு

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான டிராவிட் கூறுகையில்,‘‘ரசிகர்களை கவர பகலிரவு டெஸ்ட் அவசியம். மைதானத்திற்கு அதிகம் பேர் வருவர் என எதிர்பார்க்கிறேன். ‘பிங்க்’ நிற பந்தில் சாதிப்பதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் புஜாரா, ரகானே மாலை 6:00 மணிக்கு பயிற்சி பெற்றனர். இரவு 7:30 மணி அளவில் தான் பனியின் தாக்கம் இருக்கும். அப்போது எப்படி விளையாடப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். உலக கோப்பை போன்ற ஐ.சி.சி., தொடர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கும் தர வேண்டும்,’’என்றார். 

மூலக்கதை