நாடாளுமன்ற 70ம் ஆண்டு விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வெங்கய்யா நாயுடுவிடம் எம்பிக்கள் கோரிக்கை மனு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற 70ம் ஆண்டு விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வெங்கய்யா நாயுடுவிடம் எம்பிக்கள் கோரிக்கை மனு

டெல்லி: நாடாளுமன்றத்தில் 26ம் தேதி நடைபெற உள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்ட 70ம் ஆண்டு நிறைவு நாள் விழாவில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் டி.எம். காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் எம்.பிக்கள் ஏகேபி சின்ராஜ் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த காளியண்ண கவுண்டர் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், முதல் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினர், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினர், 6 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினர், சட்ட மேலவை எதிர்க்கட்சி துணை தலைவர், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட ஜில்லா போர்டு தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து சேவையாற்றி உள்ளார். மேலும் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து நாட்டுக்காக பணியில் ஈடுபட்டவர் டி.எம். காளியண்ண கவுண்டர் எனவும் எம்.பிக்கள் கூறுகின்றனர். காளியண்ண கவுண்டரின் 100வது பிறந்தநாள் ஜனவரி 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவுடம் எம்.பிக்கள் ஏகேபி சின்ராஜ், கணேசமூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் நாடாளுமன்றத்தில் 26ம் தேதி நடைபெறவுள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்ட 70ம் ஆண்டு நிறைவு நாள் விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வேண்டும் என வெங்கய்யா நாயுடுவிடம் எம்.பிக்கள் இருவரும் கேட்டு கொண்டுள்ளனர்.

மூலக்கதை