இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்

தினமலர்  தினமலர்
இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்

சி.ஓ.பி.டி.,க்கு நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று பெயர். சிகரெட் புகைப்பதாலும், மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் வருகிறது. மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், சளியுடன் கூடிய இருமல் இதன் முக்கிய அறிகுறிகள். மக்களை கொல்லும் நோய்களில் 8 ல் இருந்து 2வது இடத்திற்கு இந்நோய் முன்னேறியுள்ளது.

நகர மக்களை விட கிராமத்தினரை 3 மடங்கு அதிகம் பாதிக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் இந்தியர் இந்நோயால் இறக்கின்றனர். புகைப்பிடிக்கும் பழக்கம், நிலக்கரி, மரம் மற்றும் சாணத்தை எரிக்கும் பாரம்பரிய அடுப்புகள், நச்சுக் காற்று ஆகியவை இந்நோய் பரப்பும் காரணிகள் ஆகும்.

புகைப்பழக்கம்சிகரெட், பீடி புகைப்பது தான் ஆண்களுக்கு சி.ஓ.பி.டி., வர முக்கிய காரணம். இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு இப்பழக்கம் உள்ளது. அவர்களால் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர 26.6 கோடி இந்தியர்கள் புகையிலை பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை சொல்கிறது. புகையிலையினால் நிகழும் மரணங்களில் 48 சதவீதம் இதய நோயின் விளைவாகவும், 23 சதவீதம் நாட்பட்ட சுவாசக்கோளாறாலும் ஏற்படுகிறது.
25 வயதில் தான் நுரையீரல் உச்சக்கட்ட ஆற்றலோடு இயங்கும். அச்சமயம் ஒவ்வொரு முறை மூச்சிழுக்கும் போதும் 4 முதல் 6 லிட்டர் காற்று உள்ளிழுக்கப்படும். புகைப்பழக்கம் கொண்ட ஒருவர் 45 வயதாகும்போது, அவருடைய நுரையீரலுக்கு 75 வயதாகி விடுகிறது. அதாவது அந்த அளவிற்கு செயல்பாடு குறைந்துவிடுகிறது.

புகைப்பிடிக்காதவர்களுக்கும்'புகைப்பிடிப்பவர்களின் நோய்' என்று அழைக்கப்பட்ட சி.ஓ.பி.டி., இப்போது புகைப்பழக்கம் இல்லாதோரையும் பாதிக்கிறது. நான்கில் ஒரு நோயாளி ஒருபோதும் புகைப்பிடிக்காதவர் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு காற்று மாசுபாடு முக்கிய காரணம் வகிக்கிறது. உலகின் மிக மாசுபட்ட 20 நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை.அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 2017அறிக்கை, இந்தியாவில் நிகழும் 30 சதவீத மரணங்களுக்கு காற்று மாசுபாடு தான் காரணம் என சுட்டிக்காட்டுகிறது. டில்லியில் உள்ள ஒவ்வொரு மூன்றாவது குழந்தைக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இதே மையம் இந்த ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில், காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலம் 2.6 ஆண்டுகள் குறைந்திருப்பதாக தெரிவித்தது. மேலும் காற்றுமாசுபாட்டால் 49 சதவீதம் பேருக்கு சி.ஓ.பி.டி., நோய் ஏற்படுவதாகவும், இவர்களில் பாதி பேர் மரணத்தை தழுவுவதாகவும் தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் பாதிப்புஉயிரி எரிபொருளின் அதிக பயன்பாடு காரணமாக கிராமப்புறங்களில் சி.ஓ.பி.டி., பாதிப்பு உள்ளது. மரம், நிலக்கரி அல்லது சாணத்தை எரிப்பதில் இருந்து வரும் புகை இந்நோய்க்கு முக்கிய காரணியாகும். இது புகை பிடிப்பதை விட அதிகம். 70 சதவீதம் இந்திய வீடுகளின் சமையலறைகளில் சமையல் மற்றும் வெப்ப நோக்கங்களுக்காக உயிரி எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர். தினமும் 2 முதல் 3 மணி நேரம் சமைக்கும் ஒரு பெண் சராசரியாக 25 மில்லியன் லிட்டர் மிகவும் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாக 2012 அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
காற்று மாசுபாட்டை பொறுத்தவரை தர அளவுகோல் 0-50 என்றால் சுகாதாரமான அளவு 51-100 மிதமான அளவு 101-150 உடல் ஆரோக்கியத்தில் நலிந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 151-200 அனைவரையும் பாதிக்கும், 201-300 மோசமான கட்டம், 300க்கு மேல் அபாயகரமானது ஆகும்.
தலைநகர் டில்லியில் வழக்கத்தை விட காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டியது. 625 என்ற மோசமான அளவை தொட்டது.

காற்று மாசுபாடுதமிழக தலைநகர் சென்னையும் காற்று மாசுபாட்டால் பாதிப்பை சந்திக்கிறது. இங்கு தர அளவு 261ஐ தொட்டது. காற்று மாசுபாட்டினால் வட இந்தியர்களின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் குறையும் என சிக்காகோ பல்கலை எச்சரிக்கிறது.
இந்தியாவில் 1990 முதல் 2017 வரையிலான 27 ஆண்டில் 12.5 சதவீதம் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. புகைப்பிடிப்போருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ, அவை அனைத்தும் காற்று மாசுபாடு காரணமாகவும் வரும். இது குறித்த விழிப்புணர்வு அவசியம்.காற்று மாசை கட்டுப்படுத்தவாகனங்கள் உருவாக்கும் மாசுபாட்டை குறைக்க மக்கள் பஸ், ஆட்டோ போன்ற பொது போக்குவரத்திற்கு மாற வேண்டும். பயன்படாத பாலிதீன், பிளாஸ்டிக்களை எரிப்பதை விடுத்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும். பாதசாரிகள் இடையூறு இன்றி நடக்க ரோட்டின் இருபுறமும் வசதியான நடைபாதை அமைக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவோருக்கும் தனி வழித்தடம் அவசியம். பொதுபோக்குவரத்தை
ஊக்குவிக்க கட்டணத்தை குறைப்பது பலனளிக்கும்.தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சி, காற்றை கிருமி நாசினியாக மாற்றும் மரங்களை அதிகம் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நபரும் ஆண்டிற்கு ஒரு மரத்தையாவது நட்டு பராமரிக்க வேண்டும். நகரில் ஆங்காங்கே பசுமை பூங்காக்கள் அமைக்க வேண்டும். நீண்டகால திட்டங்களே காற்று மாசை குறைத்து நகரை மக்கள் வாழ தகுதியான இடமாக மாற்றும்.

மாசில் இருந்து தப்பிக்க...* ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உள்ளவர்கள் எப்போதும் கையில் மருந்துகளை வைத்துக்கொள்ளுங்கள்.
* காற்று மாசுபாட்டால் ஏற்படும் புகைமூட்டத்தின் போது தலைவலி, மூச்சுத்திணறல், இருமல் இருந்தால் செய்யும் வேலையை உடனே கிடப்பில் போட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும்.
* வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.
* வீடு, அலுவலகங்களில் ஜன்னல், கதவுகளை அடைத்து வைக்க வேண்டும். துாசு புகுந்துவிடும் அளவிற்கு வழி இருந்தால் அதனையும் அடைக்க வேண்டும்.
* வீட்டை சுத்தம் செய்யும்போது துாசி எழுந்தால் ஈரமான துணியால் துடைத்துவிட்டு பின்னர் சுத்தம் செய்ய வேண்டும்.
* விறகு மற்றும் மெழுகுவர்த்தி எரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* விட்டமின் சி அடங்கியுள்ள காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

நுரையீரல் மறுவாழ்வுசி.ஓ.பி.டி.,க்கான மருந்துகளை விட திறம்பட செயல்படுவது நுரையீரல் மறுவாழ்வு ஆகும். இதில் மருத்துவ மேற்பார்வை, ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் சுவாச நுட்பங்களின் கீழ் நாள்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு 12 வார பயிற்சிகள் உள்ளன. உடற்பயிற்சி செய்வதனால் தசைகள் நன்கு வேலை செய்து சுவாச திறன் மேம்படும்.
இது நோயாளிக்கு பலத்தை அளிக்கிறது. நம்பிக்கை ஊட்டுகிறது. மூசசுக்காற்றை உள்ளே இழுத்துவிடும் சுவாசப்பயிற்சி நச்சை வெளியேற்றும். சுவாச பாதையை சுத்தப்
படுத்தும். உடலுக்கு அதிகமான பிராண வாயு கிடைக்க வழி செய்யும். நுரையீரலின் செயல்திறனை நன்கு வைத்திருக்க உதவும். குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்கும். நாள்பட்ட சுவாச நோய்களுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் நடை பயிற்சியை முறையாக கடைபிடித்தால் புதுவாழ்வு பெறலாம்.-டாக்டர் மா.பழனியப்பன்ஆஸ்துமா, நுரையீரல் சிகிச்சை நிபுணர்மதுரை. 94425 24147

மூலக்கதை