பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நவ. 29-ம் தேதி இந்தியா வருகிறார். இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 13லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே நேற்று அதிபராக பதவியேற்றார்.  இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் குடிமக்களுக்கும்  இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என கூறினார். மேலும் இலங்கை அதிரை இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை மந்திரி அமைச்சர் இலங்கை சென்றுள்ளார். அங்கு அவர் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து இந்தியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, பிரதமர் மோடி விடுத்த அழைப்பினை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, வரும் 29-ம் தேதி இந்தியா வர சம்மதம் தெரிவித்துள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை