இலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்

கொழும்பு: இலங்கை அதிபராக கோத்தபய தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் நாமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபய ராஜபக்சே (70) வெற்றிபெற்று நேற்று அதிபராக பதவியேற்றார்.

இவரின் வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே மகனும் எம்பியுமான நாமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்கவைப்பதற்காக இலங்கை தமிழ் மக்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கும் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பாமக தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை பார்த்தேன்.

அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை.

மக்களிடையே பகையையும் துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால அதிபர் மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.

அதுதான் காலத்தின் கட்டாயம் என்பதை தமிழக அரசியல் தலைவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை