தெலுங்கானாவில் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் வருவாய் ஊழியர்கள் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..: போலீசார் கைது!

தினகரன்  தினகரன்
தெலுங்கானாவில் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் வருவாய் ஊழியர்கள் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..: போலீசார் கைது!

கரீம்நகர்: தெலுங்கானாவில் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், இன்று வருவாய் ஊழியர்கள் மீது விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகர் மாவட்டத்தில் சிகுருமமிடி தாசில்தார் அலுவலகமானாது அமைந்துள்ளது. லம்படிபள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி கங்கைய்யா, கையில் பெட்ரோலுடன் இன்று தாசில்தார் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தமது நிலப்பிரச்சனையானது கடந்த 3 ஆண்டுகளாக தீர்க்கப்பட்டாமல் இருப்பதால் மிகவும் ஆத்திரத்தில் இருந்த அவர், வருவாய் அதிகாரி அறையில் இருந்த கணினி மற்றும் கோப்புகள் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அதிகாரிகள் விவசாயி கங்கைய்யாவை தள்ளிவிட்டுள்ளனர். அப்போது, ராஜன்னா, அனிதா, திவ்யா மற்றும் சந்தர் ஆகிய ஊழியர்கள் மீது பெட்ரோல் விழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விவசாயி கங்கைய்யாவை அவர்கள் கைது செய்து அழைத்து சென்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும், ஆனால் இச்சம்பவத்தால் ஊழியர்கள் மிகவும் பதற்றமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விகாரம் குறித்து பேசிய அதிகாரிகள், நிலத்திற்கு உரிமை சான்றாக கருதப்படும் பட்டாதார் பாஸ்புக் வழங்க கங்கைய்யா கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் அவரது சகோதரரும் இந்த நிலத்திற்கு உரிமை கோருவதால் அதனை வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர் மேட் மண்டல தாசில்தாராக இருந்த விஜயா ரெட்டியை, ரமேஷ் என்ற விவசாயி அவரது அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து எரித்துக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை