பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் மற்றும் போர்ட்டர்கள் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

தினகரன்  தினகரன்
பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் மற்றும் போர்ட்டர்கள் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

புதுடெல்லி: பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் மற்றும் போர்ட்டர்கள் உயிரிழந்துள்ளது வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பனிமலை பகுதி, ஆண்டு முழுவதும் பனிக்கட்டிகளால் நிறைந்து காணப்படும். ஊடுருவலை தடுக்க இந்த பகுதியில் முகாம் அமைத்து இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஜம்மு-காஷ்மீரில் குளிர் காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சியாச்சினின் வடக்கு பனிச்சரக பகுதியில் சுமார் 18,000 அடி உயரத்தில் நேற்று பிற்பகல் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 6 ராணுவ வீரர்கள், 2 போர்ட்டர்கள் அடங்கிய குழுவினர் சிக்கி தவித்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 8 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். எனினும், 4 ராணுவ வீரர்களும், 2 போர்ட்டர்களும் உயிரிழந்துவிட்டதாகவும், 2 வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராணுவ வீரர்கள் மற்றும் போர்ட்டர்கள் மறைவுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராம்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சியாச்சின் பணிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் மற்றும் போர்ட்டர்கள் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் தைரியத்திற்கும், தேசத்துக்காக அவர்கள் செய்த சேவைக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். உயிரிழந்துள்ளவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

மூலக்கதை