ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கப்படும்: எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

தினகரன்  தினகரன்
ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கப்படும்: எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

புதுடெல்லி: ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஸ்ரீபெரும்புத்தூர்-தாம்பரம், ஸ்ரீபெரும்புத்தூர்-ஓரகடம் சந்திப்பில் தளப்பிரிப்பு மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் சந்தை வேலூர் பகுதியில் சுரங்க நடைப்பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், தாம்பரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே துறையினர் அமைத்துள்ள சுரங்கப்பாதை, என்.எச்.45 நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் முடிவு பெறுவதால், சாலையை கடக்கவும், மேற்கு தாம்பரம் செல்வதற்கும் பயனற்றதாக இருக்கிறது என்று தாம்பரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ரயில்வே சுரங்கப்பாதையை என்.எச் 45 நெடுஞ்சாலையின் குறுக்கே நீட்டித்து தர வேண்டும். மேலும் சுரங்கப்பாதையை பயன்படுத்தும் கிழக்கு தாம்பரம் மக்கள் என்.எச் 45 சாலையின் மேற்கு பகுதியை அடையுமாறு செய்தால் மிகவும்  பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே சுரங்கப்பாதை கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்து மேற்கு தாம்பரம் பகுதிக்கு நீட்டிக்கப்பட்டால், சாலை விபத்துக்கள் பெருமளவில் குறைந்துவிடும். மேலும் தற்போதுள்ள ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும், என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை