உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஹரியானா அமைச்சர்கள்: வீட்டு வாடகைப் படி, மாதம் ஒரு லட்சம்: முதல்வர் மனோகர் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஹரியானா அமைச்சர்கள்: வீட்டு வாடகைப் படி, மாதம் ஒரு லட்சம்: முதல்வர் மனோகர் நடவடிக்கை

சண்டிகர்: ஹரியானாவில் அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி, மாதம் ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 40  தொகுதிகளை கைப்பற்றிய பாஜக முதலில் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 10 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ள ஜனநாயக ஜனதா கட்சியுடன்  பேச்சு வார்த்தை நடத்தியது. இதனிடையே திடீர் திருப்பமாக ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஜேஜேபியின் ஆதரவும் பாஜகவுக்கு கிடைத்தது. இதையடுத்து ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாகவும், அக்கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க  இருப்பதாகவும் அமித்ஷா அறிவித்தார். இதனையடுத்து, ஹரியானாவில் 2-வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக மனோகர் லால் கட்டார் பதிவியேற்றார். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி, மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், அமைச்சர்களுக்கான சலுகைகள் சட்டம்-1972ல்  திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, ஹரியான அரசு தெரிவித்திருக்கிறது. இதுவரை, அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப்படி 50 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன், தண்ணீர் மற்றும்  மின்சார கட்டணமாக 20 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து, அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி மொத்தமாக, ஒரு லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை