இந்திய பெண்கள் அணி அபாரம் | நவம்பர் 18, 2019

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் அணி அபாரம் | நவம்பர் 18, 2019

கயானா: விண்டீசுக்கு எதிரான 4வது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 3–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டி கயானாவில் நடந்தது. மழையால் தலா 9 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பூஜா ஆறுதல்: இந்திய அணிக்கு, ஹேலி மாத்யூஸ் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ ஷபாலி வர்மா (7), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (6), வேதா கிருஷ்ணமூர்த்தி (5) சிக்கினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (6), தீப்தி சர்மா (4) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பூஜா (10) மட்டும் இரட்டை இலக்க ரன் எடுத்தார்.

இந்திய அணி 9 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 50 ரன் எடுத்தது. தனியா பாட்யா (8), அனுஜா பாட்டீல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் ஹேலி மாத்யூஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு செடீன் நேஷன் (3) ஏமாற்றினார். ஹேலி மாத்யூஸ் (11), சினெல்லே ஹென்றி (11), நடாஷா மெக்லீன் (10) ஆறுதல் தந்தனர்.

விண்டீஸ் அணி 9 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 45 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அனுஜா பாட்டீல் 2, தீப்தி சர்மா, ராதா யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து இந்திய அணி 4–0 என, முன்னிலை பெற்றது. ஐந்தாவது போட்டி வரும் நவ. 21ல் கயானாவில் நடக்கவுள்ளது.

மூலக்கதை