சதம் நழுவ தோனி காரணமா *காம்பிர் புது புகார் | நவம்பர் 18, 2019

தினமலர்  தினமலர்
சதம் நழுவ தோனி காரணமா *காம்பிர் புது புகார் | நவம்பர் 18, 2019

புதுடில்லி: ‘‘உலக கோப்பை பைனலில் சதம் நழுவியதற்கு தோனி தான் காரணம்,’’ என, முன்னாள் வீரர் காம்பிர் தெரிவித்தார்.

கடந்த 2011ல் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் பைனல் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா சாம்பியன் ஆனது. பைனலில் இலங்கை நிர்ணயித்த இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு காம்பிர் 97 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். 3 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இதுகுறித்து காம்பிர் கூறியது:

உலக கோப்பை பைனலில் 97 ரன் எடுத்த போது என்ன நடந்தது, ஏன் அவுட்டாகினேன் என பலமுறை எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டுள்ளேன். உண்மையில் எனது நோக்கம் எல்லாம் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்பதில் தான் இருந்தது.

அந்த நேரத்தில் என்னுடன் பேட் செய்த தோனி அருகில் வந்து,‘இன்னும் மூன்று ரன் தேவை. இதை எடுத்து விட்டால் நீ சதத்தை எட்டி விடலாம்,’ என்றார்.  உடனடியாக எனது மனது மாறியது. தனிப்பட்ட ஸ்கோர் தெரியவர, 100 அடிக்க வேண்டும் என்ற ஆசையால் அவசரப்பட்டு விட்டேன்.

தோனி சொல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை சதம் அடித்திருக்கலாம். அவுட்டாகி திரும்பிய போது, இந்த 3 ரன்கள் எனது வாழ்க்கை முழுவதும் தொல்லையாக இருக்கப் போகிறது என நினைத்தேன். அதேபோல, இப்போது வரை பலரும்,‘ஏன் அந்த 3 ரன்களை எடுக்கவில்லை,’ என கேள்வி கேட்கின்றனர்.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

காம்பிரின் இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தோனிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை