ஸ்மித்சோனியன் கேலரியில் இந்திரா நூயி படம் சேர்ப்பு

தினமலர்  தினமலர்
ஸ்மித்சோனியன் கேலரியில் இந்திரா நூயி படம் சேர்ப்பு

வாஷிங்டன்: சென்னையில் பிறந்து, வளர்ந்தவரும், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான, இந்திரா நூயியின் படம், அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உருவப்பட கலைக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் வரலாறு, வளர்ச்சி மற்றும் கலாசாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்தவர்களின் உருவப் படங்களை கொண்ட கலைக்கூடமாகும் ஸ்மித்சோனியன் கேலரி. இது, 1962ல் ஆரம்பிக்கப்பட்டதாகும்.இங்கு அதிபர்கள், கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுமார், 23 ஆயிரத்துக்கும் மேலான படங்கள் இங்குள்ளன.

தன்னுடைய உருவப் படம் கலைக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து இந்திரா நூயி கூறியதாவது: நான் இதுவரை கனவுகூட கண்டிராத ஒரு பாராட்டாகும் இது. தெற்கு ஆசியாவிலிருந்து வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னணி, நிறம், மதம், இனம் என்ன என்பது முக்கியமில்லை. நாட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துபவர்களை கொண்டாடும் நாடாக இது இருக்கிறது. இந்த நாட்டில் இருப்பது குறித்து நன்றியுள்ளவளாக உணர்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


பெப்சிகோ நிறுவனத்தில், 24 ஆண்டுகள் பணியாற்றி, அதில், 12 ஆண்டுகள் தலைமை செயல் அதிகாரியான பொறுப்பு வகித்து, நிறுவனத்தின் வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர், இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை