பலத்த எதிர்பார்ப்புக்களுக்கிடையே 2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
பலத்த எதிர்பார்ப்புக்களுக்கிடையே 201516 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை…

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கிடையே 2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில் வருமானவரி வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பபட்டுள்ளது.

இதுகுறித்து அருண் ஜெட்லி கூறுகையில், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீடுகள் அதிகரிப்பதோடு, வளர்ச்சி விகிதம் மற்றும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. பழைய நிலையே நீடிக்கும் என்று தெரிவித்தார். மேலும் 2015-16க்கான வளர்ச்சி 8 முதல் 8 புள்ளி 5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் இரட்டை இலக்கத்தை எட்டுவதே குறிக்கோள் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா, கங்கை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கான பங்களிப்புக்கு 100 சதவிகித வரி விலக்கு அளிக்கப்படும் என்பன உள்ளிட்டவை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் இல்லை என்று அறிவித்துள்ள நிதியமைச்சர், 4 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வரிச்சலுகைகள் பெறலாம் என்று அறிவித்துள்ளார். சேவை வரி 12 புள்ளி 36 சதவிகிதத்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுக்கான வருமான வரிச்சலுகை 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. செல்வ வரி முற்றிலுமாக நீக்கப்படுவதாக அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். அடுத்த 4 ஆண்டுகளுக்கான கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. இது படிப்படியாக அமல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"100 நாள் வேலைத் திட்டம் தொடரும்"

மகாத்மா காந்தி ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். இது வேலை இல்லாமல் வறுமையில் வாழ்பவர்கள் மீது கவனம் செலுத்த உதவும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் தரம் மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். அதற்காக முதற்கட்டமாக 34ஆயிரத்து 699 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்க முதலீட்டிற்கு ஊக்கம்
தங்கத்தின் மீதான ஆவண வடிவ முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய வசதியாக பத்திரங்கள் வெளியிடப்படும் என்றும், தங்க முதலீட்டில் வட்டி கிடைக்கும்படி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அசோக சக்கரம் பொறித்த தங்க நாணயங்கள் விற்பனைக்கு வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2020ல் அனைவருக்கும் வீடு
விவசாயிகளுக்கு 8.5 லட்சம் கோடி வரை கடன் உதவி வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கட்டமைப்புத்துறையை மேம்படுத்த 70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 150 கோடி ரூபாயும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், அடுத்த நிதியாண்டில் 100நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை