நாட்டின் வளர்ச்சிக்கு முழு மூச்சுடன் செயல்படுவேன்: இலங்கையின் 7-வது அதிபராக பதிவியேற்றார் கோத்தபய ராஜபக்சே

தினகரன்  தினகரன்
நாட்டின் வளர்ச்சிக்கு முழு மூச்சுடன் செயல்படுவேன்: இலங்கையின் 7வது அதிபராக பதிவியேற்றார் கோத்தபய ராஜபக்சே

அனுராதாபுரம்: இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதிவியேற்று கொண்டார். இலங்கையில் தற்போது அதிபராக உள்ள மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்  காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு  கட்சிகள்,  அமைப்புகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும், பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின்  சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் (70), ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவியது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இதில்,  கோத்தபயாவும், சஜித்தும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர். பிறகு, கோத்தபயா தொடர்ந்து முன்னிலை பெறத் தொடங்கினார். நேற்று பிற்பகலில் வெற்றி பெறுவதற்கான 50 சதவீத வாக்குகளை கோத்தபய கடந்தார். தன்னை விட 2 லட்சம் வாக்குகளை கோத்தபயா முன்னிலை பெற்ற போதே, சஜித்  பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். மேலும்,  தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். வாக்கு  எண்ணிக்கை முழுவதும் முடிந்த நிலையில், கோத்தபய வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர் மொத்தம் 69 லட்சத்து  24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசாவை  விட இவர் 13 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். கோத்தபய 52.25 சதவீத வாக்குகளையும், சஜித் 41.99 சதவீத  வாக்குகளையும் பெற்றனர். இதர வேட்பாளர்கள் 5.7 சதவீத வாக்குகளை பெற்றனர். இதையடுத்து, அனுராதாபுரம் நகரில் புத்த கோவிலுக்கு அருகே நடைபெறும் நிகழச்சியில் முறைப்படி இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இலங்கை அதிபராக பதிவியேற்றப்பின் உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, இந்த நாட்டில் வாழும் அனைவருக்குமான சலுகைகள், சமாதானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தன்னாளான உதவிகள் அனைத்தையும் செய்வதாகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கும் முழு மூச்சுடன் இறங்கி செயல்பட போவதாக உறுதியளித்தார். நாட்டின் உள்ள பழைய புறதான உள்ளிட்ட அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மதம்,இனம் என்று பாராமல் எல்லா மக்களையும் ஒரேவிதமாக வழிநடத்த போவதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை