கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கொலைவெறி தாக்குதல் : ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கொலைவெறி தாக்குதல் : ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான தன்வீர் சேட் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான தன்வீர் சேட் மைசூர் நகரில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது 22 வயதான பர்ஹான் என்ற இளைஞர் திடீரென மறைத்து வைத்து இருந்த  ஆயுதத்தால் தன்வீரின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தன்வீரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பர்ஹானை பிடித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.அந்த இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்காததால், காங்கிரஸ் எம்எல்ஏவை கத்தியால் குத்தியதாக, பிடிபட்ட நபர், போலீசாரிடம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இளைஞர் தாக்கியதில் கழுத்தில் பலத்த காயம் அடைந்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ. தன்வீர் சேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலக்கதை