ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு, பலர் படுகாயம்

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு, பலர் படுகாயம்

பிகானர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டம், ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே பாதையில் வந்த சரக்கு லாரி, பேருந்தின் மீது திடீரென மோதியது. அதிவேகத்தில் லாரி மோதியதால் பேருந்து உருக்குலைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் சாலையில் கவிழ்ந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அப்பகுதியில் நடந்த இரண்டாவது விபத்து இது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை