ஏடிபி உலக டூர் பைனல்ஸ் ஒற்றையர் இறுதி போட்டியில் சிட்சிபாஸ்-தீம் பலப்பரீட்சை: பெடரர் ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் ஒற்றையர் இறுதி போட்டியில் சிட்சிபாஸ்தீம் பலப்பரீட்சை: பெடரர் ஏமாற்றம்

லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் -  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகின்றனர். லண்டன் ஓ2 அரங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஆண்டு இறுதி உலக தரவரிசையில்  டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கினர்.  ஒற்றையர் பிரில் ஜான் போர்க், ஆந்த்ரே அகாசி என இரு பிரிவுகளில் லீக் ஆட்டங்கள் நடந்தன.ஜான் போர்க் பிரிவில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் அரை இறுதிக்கு முன்னேறிய நிலையில், நோவாக்  ஜோகோவிச் (செர்பியா) மற்றும் இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினி வெளியேற்றப்பட்டனர். அகாசி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த  சிட்சிபாஸ், அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), டானில் மெட்வதேவ்  (ரஷ்யா) இருவரும் வாய்ப்பை இழந்தனர்.இதைத் தொடர்ந்து, அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ரோஜர் பெடரருடன் மோதிய சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அபாரமாக  வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் டொமினிக் தீம் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் அலெக்சாண்டர் ஸ்வெரவை  வீழ்த்தினார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (21 வயது) - டொமினிக் தீம் (26 வயது)  மோதுகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், 21 வயது இளம் வீரர் சிட்சிபாஸ்  பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது டென்னிஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூலக்கதை