டெஸ்ட் தரவரிசை: அகர்வால், ஷமி முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
டெஸ்ட் தரவரிசை: அகர்வால், ஷமி முன்னேற்றம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் மயாங்க்  அகர்வால், முகமது ஷமி முன்னேற்றம் கண்டுள்ளனர். வங்கதேச அணிக்கு எதிராக இந்தூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 243 ரன் விளாசி  சாதனை படைத்த மயாங்க் அகர்வால் (28 வயது) 11வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர் தனது முதல் 8 இன்னிங்சில் இதுவரை 858 ரன்  குவித்துள்ளார். முதல் 8 இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் (1210), எவர்டன் வீக்ஸ் (968), சுனில் கவாஸ்கர் (938),  மார்க் டெய்லர் (906), ஜார்ஜ் ஹெட்லி (904), பிராக் வொரெல் (890), ஹெர்பர்ட் சட்கிளிப் (872) ஆகியோரைத் தொடர்ந்து அகர்வாலுக்கு 8வது இடம்  கிடைத்துள்ளது.ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் (937), இந்திய அணி கேப்டன் கோஹ்லி (912), நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் (878) உட்பட டாப் 10ல்  எந்தவித மாற்றமும் இல்லை. வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரகிம் 5 இடம் முன்னேறி 30வது இடத்தையும், இந்தியாவின் ஜடேஜா 4 இடம் முன்னேறி  35வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில், இந்தூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 27 ரன்னுக்கு 3 விக்கெட் மற்றும் 2வது  இன்னிங்சில் 31 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி அசத்திய முகமது ஷமி 8 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஆர்.அஷ்வின் 1 இடம் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். அணிகளுக்கான தரவரிசையில்  எந்த மாற்றமும் இல்லை. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 300 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில்  நீடித்து வருகிறது. இந்த வாரம் இங்கிலாந்து - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்கள் தொடங்குவதால் தரவரிசைக்கான  போட்டியும், சுவாரசியமும் அதிகரித்துள்ளது.

மூலக்கதை