கிராம மக்களின் ஒருங்கிணைந்த பணிக்கு சபாஷ்!

தினமலர்  தினமலர்
கிராம மக்களின் ஒருங்கிணைந்த பணிக்கு சபாஷ்!

மதுரை : மதுரை ஆனையூர் அருகே பராமரிப்பின்றி கைவிடப்பட்ட சிலையனேரி கண்மாயை கிராம மக்கள் ஒருங்கிணைந்து புனரமைக்கும் பணியை துவங்கினர்.

இக்கண்மாய் 89.22 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 35 ஆயிரம் கன மீட்டர் நீர் கொள்ளளவு கொண்டது. கண்மாய்க்கு மழை நீர் முக்கிய நீர் ஆதாரம். தவிர பெரியாறு வைகை பிரதான கால்வாயின் அலங்காநல்லுார் பிரிவு கால்வாய் மூலம் கண்மாய்க்கு நீர்வரத்து இருந்தது. முன்பு 150 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் பாசன வசதி பெற்றது. விளை நிலங்கள் பிளாட்டுகள் ஆனதால் பாசன பரப்பு சுருங்கியது. பராமரிப்பின்றி வரத்து கால்வாய்கள் சிதிலமடைந்தன.

சிலையனேரி மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில் இணைக்கப்பட்டது. பாசன வசதி இல்லை. எனினும் கண்மாயில் மழை நீர் தேக்கினால் நிலத்தடி நீர் பெருகும் வாய்ப்பு இருப்பதால் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழு சங்கங்கள், கிராம மக்கள் ஒருங்கிணைந்து கண்மாயில் மண்டிக்கிடக்கும் கருவேல முட்செடிகள், வரத்து கால்வாய்களை புனரமைக்க முடிவு செய்தனர். நேற்று தங்களின் சொந்த நிதியில் பணிகளை துவங்கினர். மக்களின் கூட்டு முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை