பார்க்கிங்’கில் விடப்பட்ட வாகனங்கள் திருடு போனால் ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தினகரன்  தினகரன்
பார்க்கிங்’கில் விடப்பட்ட வாகனங்கள் திருடு போனால் ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ஓட்டல்களின் பார்க்கிங்’கில் வாகனம் திருடு போனால், அந்த ஓட்டல் நிர்வாகமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியில் உள்ள தாஜ் மகால் ஓட்டலின் பார்க்கிங்’ எனப்படும் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி சென் கார், கடந்த 1998ம் ஆண்டு காணாமல் போனது. இதையடுத்து, வாகனத்தின் உரிமையாளர் ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்ட போது, பொறுப்பற்ற முறையில் அவர்கள் பதில் கூறியதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சந்தான கவுடர், அஜய் ரஸ்தோகி அமர்வு,  இந்த வழக்கில் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்தது. மேலும், ஓட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு, அலட்சியமும் கார் காணாமல் போக காரணமாக இருந்ததாக கூறி, காரின் உரிமையாளருக்கு ரூ. 2.80 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த தீர்ப்பில், `ஓட்டலுக்கு வரும் கார்களுக்கு பார்க்கிங் ரசீது வழங்கி தங்களது கட்டுப்பாட்டு, பாதுகாப்பில் வைத்திருக்கும் நிர்வாகத்தினர் அவற்றை உரிமையாளர் கொடுத்த அதே நிலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஓட்டல்களில் அறை வாடகை, உணவு, நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் அதிக தொகையை வசூலித்து விட்டு, பார்க்கிங் இலவசம் என்று கூறுவது அபத்தமானது’ என அமர்வு குறிப்பிட்டுள்ளது.மேலும், பார்க்கிங்’ ரசீதில் குறிப்பிட்டிருப்பது போல உரிமையாளர்களின் சொந்த பொறுப்பு’ என்ற ஓட்டல் நிர்வாகத் தரப்பின் வாதத்தை மறுத்த நீதிபதிகள், நிறுத்தப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பில் நிர்வாகம் அலட்சியமாக இருந்திருக்கிறது. அது மட்டுமின்றி நிர்வாகம் அல்லது வாகன நிறுத்துமிடத்தின் பணியாளர் இந்த திருட்டுக்கு ஒத்துழைப்பு அளித்திருந்தால், உரிமையாளரின் பொறுப்பு என்ற சட்டவிதி இதற்கு பொருந்தாது,’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.ஓட்டல் நிர்வாகமே அனைத்து சூழலிலும் இதற்காக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் பாதுகாவலரின் கட்டுப்பாட்டை மீறி, இயற்கை பேரிடர், வாகன ஜப்தி, பொதுமக்கள் வாகனத்தை சேதப்படுத்துதல் போன்ற எதிர்பாராத சூழல்களில் வாகனத்திற்கு ஏற்படும் சேதம், இழப்புக்கு உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை