கோவையில் உள்ளாட்சி தேர்தல் களம் கனகனக்கிறது!.'சீட்' வாங்க அரசியல் கட்சியினர் ஆர்வம்

தினமலர்  தினமலர்
கோவையில் உள்ளாட்சி தேர்தல் களம் கனகனக்கிறது!.சீட் வாங்க அரசியல் கட்சியினர் ஆர்வம்

கோவை:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்கிற நம்பிக்கையில், அரசியல் கட்சிகள், போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றன. கோவை மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு, நுாற்றுக்கணக்கானோர் மனு கொடுத்து வருகின்றனர்.தமிழகத்தில், வரும் டிச., இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
மற்ற ஏற்பாடுகளை துரிதகதியில் செய்து வருகிறது. அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், கடந்த இரு நாட்கள் விருப்ப மனு பெறப்பட்டது. கோவையில், மேயர் பதவிக்கு, 15 பேரும், கவுன்சிலர் பதவிக்கு, 521 பேரும் மனுக்கள் கொடுத்தனர்.அவகாசம் இருக்கு!கோவை மாவட்ட தி.மு. க., தலைமை கழக அலுவலகத்தில், கடந்த, 14ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படுகிறது; மாவட்ட பொறுப்பாளரான, எம்.எல்.ஏ., கார்த்திக், மனுக்கள் பெறுகிறார்.
மேயர், கவுன்சிலர் பதவிக்கு, இதுவரை, 1,200 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.கடந்த, 14ம் தேதி, தி.மு. க., சார்பில் தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பின், இரு நாட்கள் கட்சி கூட்டம் நடந்தது. இதன் காரணமாக, நேற்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்வது துவங்கியது. மேயர் பதவிக்கு, 3 பேர், கவுன்சிலர் பதவிக்கு, 202 பேர், படிவம் பூர்த்தி செய்து, கட்டணத்துடன் சமர்ப்பித்தனர்.
20ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், மனு கொடுப்போர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேபோல், தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., விலும் விருப்ப மனு பெறப்பட்டது. மேயர் பதவிக்கு, உமா, பிரதீபா, பேபி, ராஜாமணி ஆகிய நான்கு பேர், கவுன்சிலர் பதவிக்கு, 120 பேர் விருப்ப மனு அளித்தனர்.மேலிடம் முடிவு!கோவை எம்.பி.,யும், மா.கம்யூ., மூத்த தலைவருமான நடராஜனிடம் கேட்டபோது, ''எங்களது கட்சியில் விருப்ப மனுக்கள் பெறும் நடைமுறை இல்லை.
கூட்டணி கட்சியினரிடம் பேச்சு நடத்தி, பங்கீடு இறுதி செய்யப்பட்டதும், கட்சி மேலிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கும்,'' என்றார்.நான்கு நாட்கள்காங்., சார்பில் விருப்ப மனு பெறுவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. 'வரும் வாரத்தில் நான்கு நாட்கள் பெறலாம்' என, நேற்று நடந்த அக்கட்சி ஆலோசனை கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகள், விருப்ப மனுக்கள் பெற்றிருப்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நாளை (செவ்வாய்கிழமை), சென்னையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுவதால், கட்சியினர், இப்போதே ஆதரவு திரட்ட ஆரம்பித்து விட்டனர்.

மூலக்கதை