கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ஏர்இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்பனை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ஏர்இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்பனை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சில கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், ஏர் இந்தியா மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களை வரும் மார்ச்சுக்குள் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, பல ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடியாலும் வருவாய் இழப்பாலும் தவித்து வருகிறது.

ஏர் இந்தியாவுக்கு ரூ. 60,000 கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளதால், அதன் பங்குகளை விற்பனை செய்து அதன் கடனை அடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. முதல் விற்பனை முயற்சியில் ஏர் இந்தியாவை வாங்க எவரும் முன்வராததால் சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், எதிர்பார்த்த பலன் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை. மேலும், ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், மற்ற சலுகைகள் குறித்த தெளிவான விளக்கம் அளிக்காததால் இழுபறி நீடிக்கிறது.

ஏர் இந்தியாவில் 20,000 பேருக்கு மேல் பணியாற்றி வந்த நிலையில், மத்திய அரசின் ஏர்இந்தியா விற்பனை முடிவு அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதேபோல், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளித்து ஒரு லட்சம் கோடி  ரூபாயை திரட்டுவதற்காக, பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய மத்திய அரசு தேவையான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் ஜி. எஸ்டி வரி வசூலில் முன்னேற்றம் ஏற்படும். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வங்கிகள் மூலமாக 1. 8 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டதால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்து ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் பணம் ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், இந்தாண்டு இவ்விரு நிறுவனங்களின் பிரச்னைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மற்ற கள நிலவரங்கள் குறித்து ஆராயப்படும். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் ஏதும் வராததால், ஓராண்டுக்கு முன்பே, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை விற்க முடியாமல் போனது.

பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பல துறைகள் நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளன. சில துறைகளில் ஜிஎஸ்டி வரி வசூலால் விற்பனை அதிகரித்துள்ளது.

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள்  (பிபிசிஎல்) மார்ச் மாதத்திற்குள் (இந்த நிதியாண்டு) விற்பனை செய்யப்படும். எஸ்ஸார் ஸ்டீல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஐபிசி சட்டத்தின் அரசியலமைப்பு மற்றும் சட்ட வலிமையை நிலைநிறுத்தி உள்ளது.

அடுத்த காலாண்டில் வங்கிகளின் இருப்புநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை