சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று கார்த்திகை 1ம் தேதியை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டது. இதனால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்தார். அதன் பிறகு புதிய மேல்சாந்தி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

சன்னிதானத்தில் கோயில் முன்பு நடந்த நிகழ்ச்சியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர், சபரிமலைக்கு புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதீர் நம்பூதிரிக்கு வேத மந்திரங்கள் ஓதிக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து புனிதநீர் தெளித்து கோயிலுக்குள் மேல்சாந்தியை அழைத்து சென்றார். பின்னர் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

இதையடுத்து கார்த்திகை 1ம் தேதியான இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோயில் நடை திறந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று சரண கோஷம் எழுப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்று காலை கோயிலில் கட்டுக் கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டு உள்ளது.

அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ேகாயில் நடை திறந்திருக்கும். அதிகாலை 3. 20 முதல் காலை 11. 30 வரை நெய்யபிஷேகம் நடக்கிறது.
இளம்பெண்களுக்கு அனுமதியில்லை உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை இளம் பெண்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இளம் பெண்கள் சபரிமலை செல்வதை தடுக்க தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், சபரிமலையில் நடைதிறக்கப்பட்ட நேற்று ஆந்திராவில் இருந்து தரிசனத்திற்கு வந்த 50 வயதுக்குட்பட்ட 10 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், இளம்பெண்கள் வருகிறார்களா என்பதை கண்காணிக்க பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் தேவசம் போர்டை சேர்ந்த ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு வருகிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

.

மூலக்கதை