இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை

* தமிழர் பகுதியில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு
* இன்று மாலை இறுதி முடிவுகள் அறிவிப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான  வாக்கு  எண்ணிக்கை தொடங்கிய நிலையில், கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசா தமிழர் பகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறார்.

வாக்குப்பதிவு முடிவுகள் அதிகாரபூர்வமாக இன்று மாலை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் 8வது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடந்த நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே (70) மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா (52) ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தபின், வாக்குச்சீட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் கொண்டு செல்லப்பட்டு, நேற்று 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விடியவிடிய நடந்த வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இன்று அதிகாலை 4. 30 மணியளவில் வெளியான முடிவின்படி முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார்.

அவர் 9 மாவட்டங்களில் தபால் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.   மற்றொரு வேட்பாளரான சஜித் பிரேமதாசா 3 மாவட்டங்களிலேயே முன்னிலையில் உள்ளார். நாட்டின் தெற்கு பிரிவில் பதிவான வாக்குகளின்படி, கோத்தபய ராஜபக்சேவுக்கு 65 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசாவுக்கு 28 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவும், தமிழர் மற்றும் முஸ்லிம் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சஜித் பிரேமதாசாவும் முன்னிலையில் இருந்தார்.

அதன்படி, கோத்தபய 52. 87 சதவீத வாக்குகளும், சஜித் 39. 67 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் சஜித்துக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்தன.

முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான கோத்தபயவுக்கு 9. 1 லட்சம் வாக்குகளும், முன்னாள் எம்பியான சிவாஜிலிங்கம் 8,566 வாக்குகள் பெற்றிருந்தனர். முன்னதாக நேற்றைய வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக 81. 52% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு போன்றவற்றால்,  நாடே நிலைகுலைந்திருக்கும் நிலையில், இன்று நடக்கும் வாக்குப்பதிவின் முடிவுகள் உலக  அளவில் கவனம் ஈர்த்து உள்ளன.

இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தாலும், இவை தேர்தலுக்காக 22 மாவட்டங்களாக பகுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் இரண்டு நிர்வாக மாவட்டங்கள் என்றபோதும் இவை இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டங்களாக உள்ளன.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகியவை மூன்று தனித்தனி நிர்வாக மாவட்டங்களாக உள்ளபோதும் இவை மூன்றும் ஒரே தேர்தல் மாவட்டமாக உள்ளன.
வாக்குகள் தொகுதிவாரியாக எண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுகிறவரே ஜனாதிபதியாவார்.

இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படமாட்டாது. ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.

அதாவது, ஜனாதிபதியை தேர்வு செய்ய வாக்காளர்கள் முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு, மூன்றாவது தேர்வு என்று ஒருவர் மூன்று பேருக்கு வாக்களிக்க முடியும். முதல் தேர்வு மட்டுமே முதலில் எண்ணி முடிக்கப்படும்.

அதில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர்வு பெற்றவர்கள் யார் என்பது எண்ணப்படும். மேற்கண்ட முறையில்தான், இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது என்பதால், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து காலதாமதமாக வாய்ப்புள்ளது.

மேலும், 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் நீளமான வாக்கு சீட்டுகளை பயன்படுத்த வேண்டி இருந்தது. அதனால், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று தெரிகிறது.

அல்லது நாளை அதிகாலை அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை