பாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்

தினமலர்  தினமலர்
பாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்

அயோத்தி : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பு


'அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.அந்த நிலத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. அதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், டிச., 6ல் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, முஸ்லிம் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.தற்போது, அந்த நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நம்பிக்கை


இது குறித்து, உத்தர பிரதேச அரசின் உயரதிகாரிகள் கூறியதாவது:தீர்ப்பு வெளியாவதற்கு முன், அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த நடவடிக்கைகள் தொடரும். ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த, 144 தடைஉத்தரவு, டிச., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு வெளியானபோது, அயோத்தி மக்கள் அமைதி காத்தனர். அது போலவே, பாபர் மசூதி இடிப்பு தினத்தின்போது, மத நல்லிணக்கத்தை கடைப்பிடித்து, அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூன்று பேர் கைது


அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகள் பதிவிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தீர்ப்பை விமர்சித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக சாதிக் மாலிக் என்பவரும் அவருடைய இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை