இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச: மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்; கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள்

தினகரன்  தினகரன்
இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச: மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்; கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள்

கொழும்பு: இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இவ்வளவு பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை.  ஆனால், தற்போது பதவியில் உள்ள இலங்கை அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ யாரும்  இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே(70), அந்த   நாட்டின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இதற்காக, நாடு முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில்    ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு அதிகாரிளும், 60 ஆயிரம் போலீசாரும், பாதுகாப்பு படையினர் 8 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன்  நிறைவடைந்த நிலையில்,  81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்தார். பின்னர், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மீண்டும்  தொடர்ச்சியாக கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்தார். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 50% வாக்குகளுக்கும் மேலாக பெற்று கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் உள்ளார். கோத்தபய 42 லட்சத்து 83 ஆயிரத்து 432 வாக்குகள்  பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 37 லட்சத்து, 07 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித்தை விட கோத்தபய ராஜபக்சே 5,76,136 வாக்குகள் பெற்று முன்னிலையில்  உள்ளதால் வெற்றி முகத்தில் உள்ளார்.  இதற்கிடையே, இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை சஜித் பிரேமதாச ஒப்புக்கொண்டார். மேலும், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவைப் பாராட்டுகிறேன்; வாழ்த்துக்கள் மக்களின் தீர்ப்பை  ஏற்றுக்கொள்கிறேன் என்றார். தொடர்ந்து, இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாச ராஜினாமா செய்துள்ளார். 50 சதவீத வாக்கு:இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேலான ஓட்டுக்களை பெறும் வேட்பாளர், புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். இதற்கு ஏற்றபடி 3 வேட்பாளர்களை முன்னுரிமை அடிப்படையில் வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும். 50  சதவீத ஓட்டுக்களை எந்த வேட்பாளரும் பெறவில்லை என்றால், அதிக ஓட்டுக்களை பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களின் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். ஆனால், இது போன்ற சூழல் இலங்கை அதிபர் தேர்தலில்,  இதுவரை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை