காஷ்மீரில் பயங்கரவாதமே அச்சுறுத்தல்: அமெரிக்க பார்லி .,குழுவில் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் பயங்கரவாதமே அச்சுறுத்தல்: அமெரிக்க பார்லி .,குழுவில் வலியுறுத்தல்

வாஷிங்டன்:'பயங்கரவாதத்தை விட, மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு, மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்க முடியாது' என, காஷ்மீர் பண்டிட்களுக்கான அமெரிக்க அமைப்பு, அந்நாட்டு பார்லிமென்ட் குழுவினரிடம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து, அமெரிக்காவின் டாம் லான்டோஸ் மனித உரிமை ஆணையம், விசாரித்து வருகிறது. இதில், அமெரிக்க பார்லி., குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். விசாரணைக்கு முன்னதாக, அமெரிக்க வாழ் இந்திய ஹிந்து சங்கங்கள் சார்பில், ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.அதில், ஜம்மு - காஷ்மீரின் நிலை குறித்து, அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்கள் அமைப்பின் தலைவர் ஷகுன் முன்ஷி மற்றும் செயலர் அம்ரித்தா கவுர் ஆகியோர், பல விளக்கங்களை அளித்துள்ளனர்.

அதன் விபரம்:ஜம்மு - காஷ்மீரில் நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், இந்தியா சந்தித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை, இந்த கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் அரங்கேற்றப்படும் பயங்கரவாத செயல்களுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருவதை நிறுத்துமாறு, அந்நாட்டு அரசுக்கு, இந்த கமிஷன் பரிந்துரைக்க வேண்டும்.பாக்.,கின் விஷமத்தனத்தால், ஜம்மு - காஷ்மீரில், கடந்த, 30 ஆண்டுகளில், 42 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். அல் குவைதா, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் உள்ள, 25 பயங்கரவாத குழுக்கள், 130 பயங்கரவாதிகளுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

இவர்கள் அனைவரும், பாக்.,கில் இருந்து செயல்பட்டு வருகின்றனர். ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் போன்ற அமைப்புகள், கடந்த, 20 ஆண்டுகளாக, பாக்.,கில் அமர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு - காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது; அங்குள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

நாங்கள், 30 ஆண்டுகளாக, எங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல், இந்த பயங்கரங்களை வேடிக்கை பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த கமிஷன், இதுவரையிலும் எங்களை அணுகாமல் இருப்பதை கண்டு, அதிருப்தி அடைகிறோம்.பயங்கரவாதத்தை விட, மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு, மிகப்பெரிய அச்சுறுத்தல் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, ஜம்மு - காஷ்மீர் நிலை குறித்து, அரசியல் உள்நோக்கத்துடன் கற்பிக்கப்படும் காரணங்களை, இந்த கமிஷன் நம்பக்கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கு பாராட்டு!


சீக்கிய மத நிறுவனரான குரு நானக்கின், 550வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அமெரிக்க செனட் சபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, அமெரிக்கா வின் முன்னேற்றத்திற்காக, கடுமையாக உழைக்கும் அமெரிக்க வாழ் சீக்கியர்களுக்கு, செனட் உறுப்பினர்கள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தனர். முன்னதாக, திபெத்திய புத்த மத துறவி தலாய் லாமா, உலக அமைதி மற்றும் வன்முறைகளுக்கு எதிராக பாடுபடுவதை பாராட்டி, அமெரிக்க பார்லி.,யில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

என்.ஆர்.சி.,க்கு எதிர்ப்பு!

அசாமில், என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியல் வெளியிடப் பட்டதற்கு, அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான கமிஷன் கண்டனம் தெரிவித்து உள்ளது. 'இந்த நடவடிக்கை, சிறுபான்மை முஸ்லிம் மக்களை நாடற்றவர்களாக மாற்றுவதற்கான முயற்சி' என, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை