இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல் | நவம்பர் 16, 2019

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல் | நவம்பர் 16, 2019

இந்துார்: முதல் டெஸ்டில் அசத்திய இந்திய அணி இன்னிங்ஸ், 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ‘வேகங்களின்’ சொர்க்கபுரியாக திகழ்ந்த இந்துாரில் முகமது ஷமி மிரட்ட, வங்கதேசத்தின் கதை மூன்றே நாட்களில் முடிந்தது.  

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ம.பி.,யில் உள்ள இந்துாரில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 493 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்தியா ‘டிக்ளேர்’: மூன்றாவது நாள் ஆட்டத்தில் முந்தைய நாள் ஸ்கோருடன் இந்திய அணி முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 343 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.

உமேஷ் நம்பிக்கை: வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ், ஷாத்மன் இஸ்லாம் ஜோடி துவக்கம் கொடுத்தது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ‘வேகத்தில்’ மிரட்டினர். தனது பந்தில் பவுண்டரி அடித்த இம்ருல் கெய்சை (6), உமேஷ் யாதவ் போல்டாக்கினார். மறுபக்கம், இஷாந்த் சர்மா, ஷாத்மனை (6) போல்டாக்கினார்.

ஷமி அபாரம்: அடுத்து வந்த ஷமி, தன் பங்கிற்கு தொல்லை கொடுத்தார். முதலில் மோமினுல் ஹக்கை (7) அவுட்டாகிய இவர், அடுத்து முகமது மிதுனை (18) திருப்பி அனுப்பினார். தொடர்ந்து மிரட்டிய ஷமி, மகமதுல்லாவை (15) வீழ்த்தினார். 

பின் இணைந்த லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ஜோடி வேகமாக ரன்கள் சேர்த்தது. 

அஷ்வின் ‘மூன்று’: இந்நிலையில் அஷ்வின் பந்தில் லிட்டன் தாஸ் (35), அவரிடமே ‘பிடி’ கொடுத்தார். மெகிதியை (38) உமேஷ் போல்டாக்கினார். முஷ்பிகுர் (68), அஷ்வின் ‘சுழலில்’ சரிந்தார். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

முகமது ஷமி 4, அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தனர். இரட்டை சதம் விளாசிய இந்தியாவின் மயங்க் அகர்வால் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. 

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 22ல்  பகலிரவு போட்டியாக கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை பங்கேற்ற 6 டெஸ்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 300 புள்ளிகள் பெற்று, பட்டியலில் தொடர்ந்து ‘நம்பர்–1’ ஆக உள்ளது. நியூசிலாந்து (60), இலங்கை (60) அடுத்து உள்ளன. ஆஸ்திரேலியா (56), இங்கிலாந்து (56) 4, 5வது இடத்தில் உள்ளன.

வங்கதேச அணி அன்னிய மண்ணில் பங்கேற்ற கடைசி 6 டெஸ்டில், 5ல் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மூலக்கதை