சபாஷ் முகமது ஷமி: கம்மின்சை முந்தினார் | நவம்பர் 16, 2019

தினமலர்  தினமலர்
சபாஷ் முகமது ஷமி: கம்மின்சை முந்தினார் | நவம்பர் 16, 2019

இந்துார்: டெஸ்ட் பவுலர்களில் இரண்டாவது இன்னிங்சில் சிறந்த ‘ஸ்டிரைக் ரேட்’ வைத்துள்ள பவுலர்களில் முதலிடம் பெற்றார் இந்தியாவின் முகமது ஷமி.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இந்துாரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 493 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. 

அடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய ‘வேகங்கள்’ தொல்லை தந்தனர். முகமது ஷமி 3, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா 1 என வீழ்த்தி, ‘டாப் ஆர்டரை’ தகர்த்தனர். இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது இன்னிங்சில் குறைந்தது 25 விக்கெட் வீழ்த்திய டெஸ்ட் பவுலர்களில், சிறந்த ‘ஸ்டிரைக் ரேட்’ கொண்ட ‘நம்பர்–1’ பவுலரானார் ஷமி (31.9). ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (36.6) இரண்டாவது இடத்தில் உள்ளார். 

நான்கு இந்திய பவுலர்கள்

இரண்டாவது இன்னிங்சில் சிறந்த ‘ஸ்டிரைக் ரேட்’ கொண்ட ‘டாப்–6’ பட்டியலில் ஷமி, பும்ரா, இஷாந்த், ஜடேஜா என நான்கு இந்திய பவுலர்கள் இடம் பெற்றனர். 

பவுலர்/அணி விக்கெட்    ‘ஸ்டிரைக் ரேட்’

ஷமி/இந்தியா         50 31.9

கம்மின்ஸ்/ஆஸி., 48 36.6

ரபாடா/தெ.ஆப்., 34 40.4

பும்ரா/இந்தியா 29 44.0

இஷாந்த்/இந்தியா 27 45.4

ஜடேஜா/இந்தியா 32 45.9

நேற்று 31 ரன்னுக்கு 4 விக்கெட் சாய்த்த இந்தியாவின் ஷமி, சொந்த மண்ணில் தனது மூன்றாவது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். முதல் இரு இடத்தில் விசாகப்பட்டனம் (35 ரன்/5 விக்., தெ.ஆப்.,) கோல்கட்டா (47 ரன்/5 விக்., விண்டீஸ்) டெஸ்ட் உள்ளன.

மிரட்டிய ‘வேகங்கள்’

இந்துார் டெஸ்டில் முகமது ஷமி 7, உமேஷ் யாதவ் 4, இஷாந்த் 3 என மொத்தம் 14 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் சாய்த்தனர். அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தினார். சமீபத்திய போட்டிகளில் இந்திய ‘வேகங்களின்’ சிறப்பான செயல்பாடாக இது அமைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கத்தில் இந்தியாவின் உமேஷ், இஷாந்த், முகமது ஷமி இணைந்து தொடர்ந்து 23 ஓவர்கள் வீசினர். 2001க்குப் பின் சொந்த மண்ணில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அதிக ஓவர்கள் வீசிய போட்டி இது தான்.

மூலக்கதை