மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாதம் காலஅவகாசம்: இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாதம் காலஅவகாசம்: இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

இலங்கை போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை 6 மாதங்கள் கழித்து தாக்கல் செய்ய ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

 

இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசு தனது விசாரணையை முடிக்க கால அவகாசம் கோரியதையடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. மார்ச் மாதம் 25-ம் தேதி தாக்கல் செய்யப்படவிருந்த இந்த அறிக்கை, ஆறு மாத காலதாமதமாக வரும் செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் ஜெயிட் ராட் அல் ஹுசைன் இலங்கைக்கு கால அவகாசம் அளிக்க பரிந்துரை செய்துள்ளார். இலங்கை அரசால் நடத்தப்படும் விசாரணையில், புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பிருப்பதால் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயிட் ராட் அல் ஹுசைன் கூறியுள்ளார். ஐநா மனித உரிமை ஆணையத்தின் இந்த முடிவை சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை கட்டாயமாக செப்டம்பர் மாதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரிட்டன் கூறியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணையத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் எனறு வலியுறுத்தப்பட்டது. 2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் 40 ஆயிரம் போர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறிவருகிறது. ஆனால் இதனை இலங்கை அரசு மறுத்து வருகிறது.

மூலக்கதை