அமெரிக்கா வரியை அதிகரித்தும் சீன பொருட்கள் ஏற்றுமதி அபாரம்

தினகரன்  தினகரன்
அமெரிக்கா வரியை அதிகரித்தும் சீன பொருட்கள் ஏற்றுமதி அபாரம்

பீஜிங்: அமெரிக்கா சீன பொருட்கள் மீது வரியை பல மடங்கு அதிகரித்த பிறகும், அந்த நாட்டுக்கு சீனாவில் இருந்து ஏற்றுமதி கடந்த மாதம் கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போர் உச்சகட்டத்தில் உள்ளது. சீன பொருட்கள் அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன. இதனால் ஏற்படும் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யவும், சீனாவில் இருந்து  இறக்குமதியை கட்டுப்படுத்தவும் சீன பொருட்களுக்கு வரிகளை அமெரிக்கா விதித்து வருகிறது.  இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீது வரி விதிக்கிறது. அமெரிக்கா வரி விதித்த பிறகும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் சீனாவில் இருந்து ஏற்றுமதி 15.6  சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு மட்டும் முந்தைய ஆண்டை விட 13.2 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.  சீனாவின் 20,000 கோடி டாலர் மதிப்பிலான (சுமார் ₹14 லட்சம் கோடி) பொருட்கள் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதித்திருந்தார் டிரம்ப். இது கடந்த செப்டம்பர் 24 முதல் அமலுக்கு வந்துள்ளது. சீனா நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் ஜனவரி முதல் 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால்தான் கடந்த மாதம் ஏற்றுமதி முன்கூட்டியே அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை