மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்படம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்படம்

-தாரா சிவா 

மலைகளின் மீது எனக்கு என்றுமே ஒரு மயக்கம் உண்டு. எனது தாத்தா-பாட்டியின் ஊரில் இருந்து ஒரு மணி நேர பேருந்து பயணம் தான் கொல்லி மலையின் அடிவாரம். சிறு வயதில், தாத்தா வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து, தூரத்தில் எதிரே தெரியும் கொல்லி மலைத் தொடரை பக்கம் பக்கமாக வரைந்து தள்ளி இருக்கிறேன். படம் வரையாமல் சும்மா அந்த மலைத்தொடரை பார்த்துக்கொண்டிருப்பதே எனக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. அதுவும் அந்தி சாயும் நேரத்தில் கருநீலமான உயரமான மலை முகட்டுகளில் பளிச் பளிச்சென்று தெரியும் விளக்கு வெளிச்சங்கள் பார்க்க ரம்மியமாக இருக்கும். தாத்தா வீட்டிற்கு கொல்லி மலையிலிருந்து செவ்வாழைப் பழத்தார் மற்றும் மலைவாழைப் பழத்தார்களை ஒருவர் கொண்டு வந்து கொடுப்பார். அப்போதெல்லாம் கொல்லிமலையில் பேருந்து செல்லும் வசதி இல்லையென்பதால், அவர் கால்நடையாகவே மலையிலிருந்து அடிவாரத்திற்கு வாழைப்பழத் தார்களைக் கொண்டு வந்து தருகிறார் என்று தாத்தா சொல்வார்.

Hiking என்பது இப்பொழுது ஒரு பொழுதுபோக்கு(recreation). “India Hiking” என்கிற மிகப் பெரிய பொழுதுபோக்கு நிறுவனம், இந்தியா முழுவதும் முக்கிய மலைத் தொடர்களில், முறையாக மலையேற்றப் பயணங்கள்(hiking) ஏற்பாடு செய்கிறது. இந்த மலையேற்றப் பயணங்கள் இந்தியாவில் மிகப் பிரபலமாகி வருகின்றன. பலர் ஆர்வமாகப் பங்கேற்கிறார்கள். இந்த India Hiking நிறுவனம் கொல்லி மலையிலும் ஹைக்கிங் பயணங்கள் ஏற்பாடு செல்லும் அளவு இன்று கொல்லிமலை commercialize ஆகியுள்ளது. இதுதான் கிட்டத்தட்ட “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தின் கதை. அன்று தாத்தா வீட்டிற்கு வாழைப்பழத் தார் கொண்டு வந்து கொடுத்தவர் தான் இன்று “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தின் ரங்கசாமி கதாபாத்திரம்!!

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஊர்களில் வாழும் மக்களுக்கு, அந்த மலையே வாழ்வாதாரம். “மலைபோல் நம்புகிறோம்” என்று சொல்வோம். அந்த மக்களுக்கோ “மலையே நம்பிக்கை”. இன்று நாங்கள் ஹைக்கிங் காலணிகள், ஹைக்கிங் கைத்தடிகள், தொப்பி, பேக்பேக் சகிதம், மலையேற்றம் செல்கிறோம், ஆனால் அவர்களோ, லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு, ரப்பர் காலணிகள் அனிந்துகொண்டு ஒரு நாளைக்கு நான்கு முறை மலையேறி இறங்குகிறார்கள். கீழிருந்து செய்திகள் கொண்டு மேலே சேற்கிறார்கள், பணப் பறிமாற்றம் செய்கிறார்கள். மேலிருந்து ஏலக்காய், தக்காளி போன்றவற்றை மூட்டைகளாகத் தூக்கிக்கொண்டு கீழே வருகிறார்கள். அதுவே அவர்களின் அன்றாட வாழ்க்கை.

கதாபாத்திரங்களின் தேர்வு மிக அற்புதம்! ரங்கசாமியாக வரும் அந்தப் புதிய நடிகர் அப்படி பொருந்துகிறார் அந்தக் கதாபாத்திரத்தில். “சரிண்ணே… செஞ்சிடறேண்ணே…சொல்லிடறேண்ணே” என்று பவ்வியமாகப் பெரியவர்களிடம் பேசி, வழியில் பார்ப்பவர்களையெல்லாம் “நல்லாருக்கீங்களா?” என்று வாஞ்சையாக விசாரித்துக்கொண்டே, வழியில் எல்லாருக்கும் உதவிக்கொண்டே அடிவாரத்திலிருந்து மலையேறிச்செல்லும் அவரின் அந்த மலயேற்றப் பயணம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. நாமும் கூடவே செல்வது போலவே இருக்கிறது. முதல் பகுதியில் சுறுசுறுப்பாக மலையில் ஏறி, இறங்கி, மலைக்கும் மடுவுக்கு ஒரு இணைப்புப் பாலமாக இயங்கி வந்த ரங்கசாமி, பிற்பகுதியில் பல வகையில் அடிபட்டு, நலிவுற்று, ஒரு நடைபிணம் போல் சீறுடை அனிந்த வாட்ச்மேனாக வேலைக்குச் செல்லும் காட்சி, நம் மனதை உறுக்குகிறது. ரங்கசாமியின் மீதுள்ள தன் காதலை மிகையில்லாமல் வெளிப்படுத்தும் ஈஸ்வரி…தள்ளாத வயதிலும் தளராது மூட்டைத் தூக்குவதே தன் வாழ்வின் பிறவிப் பயனாகவும் பெருமிதமாகவும் நினைத்து, வாய் ஓயாது தன் பெருமையையே பேசிக்கொண்டிருக்கும் அந்த முதியவர்… கணக்குப்பிள்ளை, கங்காணி என்று எல்லோருமே தம் இயல்பான நடிப்பினால் நமக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறார்கள்.

ஒன்றிரண்டு குறைகள் சொல்லலாம். ஓளிப்பதிவு அருமையாகஇருந்தாலும், அந்த மலையேற்றப் பயணங்களில் போது, ஏதோ வறண்ட நிலத்தில் நடந்துபோவது போல்தான் காட்டப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல், கேரளா மலைப்பதைகளில் பேருந்தில் சென்றபோதெல்லாம் இருபக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்களைக் கொண்ட அடர்வனமாக இருந்ததாக சிறு வயது ஞாபகம். இரண்டாம் பகுதியில் அந்த அடிவார ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒருவர் படிப்படியாக முன்னேறி, பெரிய வியாபாரியாக வந்து பின் ரங்கசாமி போன்ற அப்பாவிகளின் அவல நிலையை தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது, மற்றும் அந்த கம்யூனிஸ்ட் குழு ஒரு முதலாளியைக் கொலை செய்வது எல்லாம் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தது.

இசை இளையராஜா என்று சொன்னால் தான் தெரிகிறது. அதுதான் ஒரு நல்லத் திரைப்படத்திற்கு அடையாளம். என் அப்பா அடிக்கடி சொல்வார். இசையோ, ஒளிப்பதிவோ, நடிப்போ…அது அந்தத் திரைப்படத்தை விஞ்சியதாக இருக்கக்கூடாது என்று. அதே போலவே இசை அளவாகவே இருக்கின்றது. இயக்குனர் லெனின் பாரதியைப் பற்றி நான் பிரமிக்கும் ஒரு விசயம்….அவரிடம் விஜய் சேதுபதி, தான் அந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னபோது, அதை மறுத்துவிட்டாராம்!! காரணம் அவர் நடித்தால் அது விஜய் சேதுபதி படமாகிவிடுமே தவிர, சொல்ல வந்த கதை மக்களைச் சரியாகச் சென்றடையாது என்பதால்!! என்ன ஒரு தன்னம்பிக்கையான முடிவு! மிகச் சரியான முடிவும் கூட! ரங்கசாமியின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தால், நானே அவரின் வசீகரமானச் சிரிப்பிலும், அழகானப் பேச்சிலும் மனதைப் பறிகொடுத்து, கதையிலும் கருத்திலும் கவனம் செலுத்தியிருக்க மாட்டேன்!!!

ஏலக்காயின் நறுமனம் கமழும்போதெல்லாம், மடித்து கட்டிய லுங்கியுடனும், ரப்பர் செறுப்புடனும் மூட்டைத் தூக்கி மலைப் பாதைகளில் நடந்து வந்த அந்த எளிய மக்கள் நம் நினைவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டத் திரைப்படம் “மேற்குத் தொடர்ச்சி மலை”!!

 

 

மூலக்கதை