அரசியல்வாதிகள் மீதான வழக்கை விசாரிக்க தமிழகத்தில் சிறப்பு கோர்ட் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

தினகரன்  தினகரன்
அரசியல்வாதிகள் மீதான வழக்கை விசாரிக்க தமிழகத்தில் சிறப்பு கோர்ட் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி: ‘‘அரசியல்வாதிகள் மீதான வழக்குளை மட்டும் விசாரிக்கும் வகையில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறி உள்ளது.பாஜவைச் சேர்ந்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற எம்பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும், இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், ஓராண்டுக்குள் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கவும் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்தது. மேலும், எம்.பி,எம்எல்ஏக்கள் மீதான 1,581 வழக்குகள் விசாரணை எந்த நிலையில் இருக்கிறது, எப்போது வழக்கு விசாரணை முடியும் என்ற தகவலையும் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க டெல்லியில் 2 சிறப்பு நீதிமன்றமும், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 1 சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 12 சிறப்பு நீதிமன்றங்களில் 6 நீதிமன்றங்களுக்கு செஷன்ஸ் நீதிமன்ற அந்தஸ்தும், 5 மாஜிஸ்திரேட் நீதிமன்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அந்தஸ்து குறிப்பிடப்படவில்லை.சிறப்பு நீதிமன்றத்தில் 1233 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. அதில், 136 முடித்து வைக்கப்பட்டுள்ளது. 1097 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகா, மத்திய பிரதேசம், பாட்னா, கொல்கத்தா மற்றும் கேரளா உயர் நீதிமன்றங்கள் கூடுதலாக சிறப்பு நீதிமன்றங்கள் தேவையில்லை என கூறியுள்ளன. கூடுதல் நீதிமன்றம் தேவை என கூறியுள்ள மும்பை உயர் நீதிமன்றம், எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. சென்னை, ஐதராபாத், அலகாபாத் உயர் நீதிமன்றங்கள் எந்த தகவலும் அளிக்கவில்லை. கூடுதல் நீதிமன்றம் தேவைப்பட்டால், அதை மாநில அரசிடமிருந்து நிதி பெற்று நடத்த வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை