ட்வீட் கார்னர்... சர்ச்சையை கிளப்பிய கார்ட்டூன்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... சர்ச்சையை கிளப்பிய கார்ட்டூன்!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் மோதிய அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ், நடுவர் கார்லோஸ் ராமோசுடன் வாக்குவாதம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. செரீனாவின் செயலால் அதிருப்தி அடைந்த நடுவர் முதலில் ஒரு புள்ளி அபராதமும் அதைத் தொடர்ந்து ஒரு கேம் அபராதமும் விதிக்க, ஆத்திரம் அடைந்த செரீனா டென்னிஸ் மட்டையை ஓங்கி அடித்து உடைத்ததுடன் ராமோசை திருடன், பொய்யர் என திட்டித் தீர்த்தார். மேலும், தான் ஒரு பெண் என்பதாலேயே நடுவர் பாரபட்சமாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டினார். விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதால் செரீனாவுக்கு டென்னிஸ் சங்கம் அபராதம் விதித்த நிலையில், முன்னாள் பிரபலங்கள் பலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளியாகும் ஹெரால்ட் சன் நாளிதழில் மார்க் நைட் என்பவர் வரைந்த கேலிச்சித்திரம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. மார்க்கின் கார்ட்டூன் நிறவெறியுடன் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது என ட்விட்டரில் பலரும் தகவல் பதிந்து வருகின்றனர். எனினும், களத்தில் செரீனாவின் மோசமான நடத்தையை விமர்சிக்கும் வகையிலேயே கார்ட்டூன் வரைந்ததாகவும், பெண்களை கேலி செய்வது தனது நோக்கமல்ல என்றும் மார்க் விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை