ஆரிய பெரும்பாக்கம் துணை மின் நிலையத்தால்...நிம்மதி! 8 ஆண்டுக்கு பின் பயன்பாட்டிற்கு வந்த ஆச்சரியம்

தினமலர்  தினமலர்

காஞ்சிபுரம்:ஆரிய பெரும்பாக்கத்தில், 230 கே.வி., திறன் துணை மின்நிலையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள, 250 கிராமங்களில் நிலவும் மின் பிரச்னைக்கு விடிவு கிடைக்கும் என, மின் அதிகாரிகள் கூறினர்.காஞ்சிபுரம் அருகே உள்ள ஆரிய பெரும்பாக்கத்தில், 230 கே.வி., திறன் உடைய துணை மின் நிலையம் அமைக்கப்படும் என, 2010ம் ஆண்டிலேயே அறிவிப்பு வெளியாகியது. ஆனால், அதற்கான பணிகள் மெதுவாகவே துவங்கின.
ஆரிய பெரும்பாக்கத்தில், 230 கிலோ வாட் எனப்படும், கே.வி., திறன் உடைய துணை மின் நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.காரணம், காஞ்சிபுரம், தாமல், பள்ளூர், நீர்வள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும், 110 கே.வி., திறன் துணை மின் நிலையங்களில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னை தீரும் என்பதால் அவசியமானது.
இந்த துணை மின் நிலையங்களுக்கு, ஒரகடத்தில் செயல்படும், 230 கே.வி., திறன் மின் நிலையத்திலிருந்து, மின்சாரம் பெறப்பட்டு வந்ததால், மின் பளு தாங்காமல், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.இதை சரி செய்யவே, ஆரிய பெரும்பாக்கத்தில், 2010ல், 230 கே.வி., திறன் துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கால்நடைத் துறையிடமிருந்து, 17.25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து மின் பாதைகள் அமைக்கப்பட்டும், துணை மின் நிலையம் அமைக்கப்படாமல், பணிகள் கிடப்பில் இருந்தன.கடந்த, 2015 வரை, 'டெண்டர்' விடுவதில் கூட, பல பிரச்னைகள் இருந்ததாக தகவல்கள் இருந்தன.ஒரு வழியாக, டெண்டர் விடப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று, சமீபத்தில் முடிந்தன. துணை மின் நிலையம், 7ம் தேதியிலிருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஆரிய பெரும்பாக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ள, துணை மின் நிலையத்தால், காஞ்சிபுரம், தாமல், பள்ளூர், நீர்வள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும், 110 கே.வி., திறன் துணை மின் நிலையங்களில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னை தீரும்.இதுமட்டுமல்லாமல், காஞ்சிபுரம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள, 250 கிராமங்களில், மின்சாரம் தொடர்பான பல பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.
குறிப்பாக, குறைவான மின் அழுத்தம், தடுமாற்றத்தோடு வரும் மின் சப்ளை, மின் இழப்பு போன்றவை தவிர்க்கப்படும்.மின் இழப்பு தடுப்பின் காரணமாக, ஆண்டுக்கு, 17 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு சேமிப்பாகும்.காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது ஏற்படும் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னை தீரும்.சமீப நாட்களாக, இரவில் ஏற்படும் மின்வெட்டு, அடுத்து வரும் நாட்களில் நிச்சயம் இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை