பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

திருப்பதி: பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியா முழுவதும் இன்று பந்த் நடத்த காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனசேனா, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சியினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ்களை எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

இதன்காரணமாக கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது. அதிகாலையில் திறக்கவேண்டிய டீக்கடைகளும் திறக்கப்படவில்லை.

இதற்கிடையில் திருப்பதி பஸ் நிலையம அம்பேத்கர் சிலை அருகே கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.

அப்போது அங்கு வந்த டிஎஸ்பி முனிராமய்யா மற்றும் போலீசார், கட்சியினரை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து ெசல்லாததால் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி எம்ஆர்பள்ளி போலீஸ் நிலையத்தில் தங்க வைத்தனர்.

அப்போது அவர்களின் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சி பந்த்தில் கலந்து கொள்ளாமல் தனியாக டவுன் கிளப் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பந்த்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.

பக்தர்கள் தவிப்பு
திருப்பதியில் இருந்து திருமலைக்கு இடையூறு இன்றி வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசித்த பக்தர்கள் திருப்பதிக்கு வந்தனர்.

அங்கிருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாமல் பஸ் நிலையத்திலேயே தவித்தனர்.

பலர் ரயில்களில் செல்ல முயன்றதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

.

மூலக்கதை