பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு: 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு: 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில், 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதில், தென்மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். தமிழகத்தில் பல இடங்களில் அரசியல் கட்சியினர், தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த, அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகளும், முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன.

காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று திமுக, ேதசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன.
ஆம்ஆத்மி கட்சி, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரமுடியாது என்றும், மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அறிவித்துவிட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், போராட்டம் நடத்தியது. சிவசேனா கட்சி முழு அடைப்பில் பங்கேற்கவில்லை.

ஆனால், மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சி முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தது. ஒடிசாவில், பிஜூ ஜனதா தளம் ஆட்சியில் இருந்தாலும், முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சனிக்கிழமையே விடுமுறையை அறிவித்தது.


அதேபோல், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடப்பதால், அங்கு முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இடதுசாரி கட்சிகள், தனியாக முழுஅடைப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டது.

இக்கட்சிகள், காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணி, போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அங்கு 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் சில வன்முறை சம்பவங்கள் நடந்தன.

சில இடங்களில் வாகனங்கள் எரிப்பு, சாலையில் டயரை தீவைத்து எரித்தல் போன்றவை நடந்தது. மகாராஷ்டிராவில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், அந்தேரி ரயில்வே ஸ்டேசனில் இருந்து அவ்வழியாக சென்ற ரயிலில் ஏறி போராட்டம் நடத்தினார்.

அதனால், அந்த ரயில் சேம்பர் ஸ்டேசனில் நிறுத்தப்பட்டது. வாசிநேகா போன்ற பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால், பயணிகள் சிலர் காயமடைந்தனர்.

மத்திய பிரேதசத்தில், பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட, காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில், சிலர் காயமடைந்தனர். பொதுவாக, முழு அடைப்பு போராட்டம் காரணமாக பாஜ மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக தென்மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இருந்ததால், முற்றிலும் முடங்கின. ஆனால், தமிழகத்தில் முழு அடைப்புக்கு ஓரளவு மட்டுமே ஆதரவு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

பல மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழங்கங்களை எழுப்பி, தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். லாரி உரிமையாளர் சங்கங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால்  நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

தலைநகர் டெல்லியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக  கண்டனப்பேரணி நடைபெற்றது. முன்னதாக, அவர் 10 நாள் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துக் கொண்டு, நேற்றிரவு தான் டெல்லி திரும்பினார்.

இன்று காலை, அவர் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன், டெல்லி ராஜ்காட்டில்  உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, ராஜ்கோட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை கட்சியினருடன் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். காலை 10 மணியளவில் ராம்லீலா மைதானத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், யுபிஏ தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.சென்னையில் பஸ்கள் இயங்கின
நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 முக்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. எனவே இன்றைய போராட்டத்தில் சுமார் 70 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தொமுச பொருளாளர் நடராஜன் தெரிவித்திருந்தார்.

இதனால் 50 சதவீத பஸ்கள் இன்று ஓடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சி தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் மாற்று ஊழியர்களை கொண்டு இன்று சென்னையில் பெரும்பாலான பஸ்கள் காலை முதல் இயக்கப்பட்டன.

இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாமிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் நாள் ஒன்றுக்கு 3,439 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 44 மட்டுமே இன்று ஆளில்லாமல் இயக்கப்படாமல் உள்ளது.

மீதமுள்ளவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன. அனைத்து மேலாளர்களையும் பஸ் டெப்போவில் பஸ் இயக்கத்தை கண்காணிக்கும்படி உத்தரவிட்டுளோம்’’ என்றார்.

இருப்பினும் சில உட்புற பகுதிகளில் பஸ்கள் வழக்கத்துக்கு மாறாக தாமதமாக இயங்கின. சில இடங்களில் பஸ்கள் வராததால் மக்கள் சிரமப்பட்டனர்.

இதேபோல் பிற மாவட்டங்களிலும் இன்று பெரும்பாலான பஸ்கள் இயங்கின. அதே சமயம் அண்டை மாநிலமான கேரளாவில் இடதுசாரி கட்சி ஆட்சியில் உள்ளது.

கர்நாடகா, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் அங்கு முழு அளவில் பந்த் நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் இருந்து இந்த மாநிலங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் அம்மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டன.

எனவே இந்த மாநிலங்களில், பிரச்னை ஏற்படும் என கருதி தமிழக பஸ்கள் ஒன்று கூட இயக்கப்படவில்லை..

மூலக்கதை