தமிழகம் முழுவதும் 67,654 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: பெயர் உள்ளதா என்று பொதுமக்கள் பார்க்கவும் ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் 67,654 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: பெயர் உள்ளதா என்று பொதுமக்கள் பார்க்கவும் ஏற்பாடு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்று  67,654 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர் உள்ளதா என்று பொதுமக்கள் இந்த முகாமுக்கு வந்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இந்திய தேர்தல் ஆணையம், 01. 01. 2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது.

elections. tn. gov. in என்ற இணையதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வாக்காளர் பட்டியலின் நகல் வழங்கப்பட்டுள்ளது.

1-9-2018 தேதிய நிலவரப்படி, தமிழகத்தில் 5,82,89,379 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் 2,88,76,791 பேர் ஆண் வாக்காளர்கள், 2,94,07,404 பேர் பெண் வாக்காளர்கள். 5,184 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

மேலும், தமிழகத்தில் 1-9-2018 முதல் 31-10-2018 வரை 2 மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், நீக்கம், முகவரி மாற்றம் செய்யலாம்.

அலுவலக நாட்களில், உள்ளாட்சி அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் காலை முதல் மாலை வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பத்தை பெற்று பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், அலுவலகம் செல்பவர்களுக்கு வசதிக்காக, இன்று மற்றும் 23ம் ேததி,  7. 10. 2018 மற்றும் 14. 10. 2018 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 67,654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ரேஷன் கார்டு, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது, ஆதார் கடிதம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை கட்டாயம் வழங்க வேண்டும். வயது சான்றாக பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி சான்றிதழின் நகல் அளிக்கலாம்.

www. nvsp. in என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


.

மூலக்கதை