கோஹ்லி கொடி பறக்குமா... | ஆகஸ்ட் 29, 2018

தினமலர்  தினமலர்
கோஹ்லி கொடி பறக்குமா... | ஆகஸ்ட் 29, 2018

சவுத்தாம்ப்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது. இதில், அருமையான ‘பார்மில்’ உள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற காத்திருக்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டில் இங்கிலாந்து வென்றது. மூன்றாவதில் எழுச்சி கண்ட இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

தற்போது தொடரில் இந்தியா 1–2 என பின்தங்கியுள்ளது. நான்காவது டெஸ்டில் வென்றால் தொடரை 2–2 என சமன் செய்யலாம். ஐந்தாவது போட்டியிலும் சாதித்தால், தொடரை 3–2 என கைப்பற்றலாம். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் வழியில் வரலாறு படைக்கலாம். 1936ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இவரது தலைமையிலான அணி, தொடரில் 0–2 என பின்தங்கியிருந்தது. அடுத்த மூன்றில் வென்று, தொடரை கைப்பற்றியது.

பலமான ‘பேட்டிங்’

இந்திய அணியை பொறுத்தவரை ‘பேட்டிங்’ பலமாக உள்ளது. சிறந்த ‘ஓபனிங்’ தர தவான், லோகேஷ் ராகுல் உள்ளனர். ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, சதங்களாக விளாசும் கோஹ்லி(440 ரன்) நம்பிக்கை அளிக்கின்றனர். ரகானேவும் ‘பார்முக்கு’ திரும்பி விட்டார். ஹர்திக் பாண்ட்யா, ‘ஆல்–ரவுண்டராக’ மீண்டும் அசத்தலாம். இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, பாண்ட்யா என அனைத்து ‘வேகங்களும்’ பட்டையை கிளப்புகின்றனர். இத்தொடரில் இதுவரை இந்தியா சாய்த்த 46 விக்கெட்டுகளில் 38 ‘வேகங்கள்’ எடுத்தவை.  இடுப்பு பகுதியில் காயம் அடைந்த அஷ்வினுக்கு மாற்றாக ஒருவேளை ரவிந்திர ஜடேஜா வரலாம். இருப்பினும் வெற்றிக் கூட்டணியை மாற்ற கோஹ்லி விரும்ப மாட்டார்.

காயம் சோகம்

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், வோக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். பேர்ஸ்டோவ் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட உள்ளார். விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஜோஸ் பட்லர் ஏற்கிறார். கிறிஸ் வோக்சிற்கு பதில் இளம் குர்ரன் வருகிறார். போப்பிற்கு மாற்றாக மொயீன் அலி இடம் பெறுகிறார். அலெஸ்டர் குக், ஜென்னிங்ஸ் ‘பார்ம்’ இல்லாமல் தவிக்கின்றனர். கேப்டன் ஜோ ரூட், ‘வேகப்புயல்கள்’ ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சனை அதிகம் சார்ந்துள்ளது.

 

மூலக்கதை