ஹிந்திப் படத்தில் நடிப்பாரா அஜித் குமார் ?

தினமலர்  தினமலர்
ஹிந்திப் படத்தில் நடிப்பாரா அஜித் குமார் ?

அஜித் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து மீண்டும் 'நேர்கொண் பார்வை' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள மற்றொரு படத்தை தயாரிக்க உள்ளார்.

அந்தப் படத்திற்குப் பிறகும் அவர் அஜித் நடிக்க மேலும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர் மறுத்துள்ளார்.

“அஜித்துடன் 3 படங்கள் தயாரிக்கப் போவதாக மீடியாக்களில் தவறாக செய்திகள் வந்துள்ளன. 'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு ஒரு ஆக்ஷன் படம் தயாரிக்க உள்ளோம். ஒரு ஹிந்திப் படத்தில் நடிப்பதற்காக அவரிடம் கேட்டுள்ளோம், ஆனால், அவர் இன்னும் சம்மதிக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, 'அசோகா' என்ற ஹிந்திப் படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் அஜித் நடித்துள்ளார். ஒரு முழு நாயகனாக ஹிந்தியில் நடிக்க அவர் சம்மதிப்பாரா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது.

மூலக்கதை